

மதுராந்தகத்தில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெக-வினர்
மதுராந்தகம்: மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பணிக்குழு அலுவலகத்தில் இன்று (செப்.19) நடைபெற்ற முகவர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பேசினர்.
அப்போது அமைச்சர் ஆதவ் பேசுகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் திடீர் எழுச்சியைக் கண்டு திமுகவினர் குழப்பமடைந்துள்ளனர். முன்பு தவெகவை ‘இன்ஸ்டாகிராம் கட்சி’, ‘ஜென் ஸீ கட்சி’, ‘ரீல்ஸ் கட்சி’ என விமர்சித்தார்கள். தற்போது மக்கள் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது.
தவெகவின் அரசியல், சாதாரண மக்களையும் சட்டப்பேரவை உறுப்பினர்களாகவும் முதல்வராகவும் உருவாக்கும் வகையில் இருக்கிறது. இது 1967-ல் பேரறிஞர் அண்ணா ஏற்படுத்திய அரசியல் மாற்றத்தை நினைவுபடுத்துகிறது. பணத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியலை மாற்றி, மக்களின் அன்பு மற்றும் நம்பிக்கையை மட்டுமே நம்பி தேர்தலை எதிர்கொள்கிறோம்.
மதுராந்தகம் இடைத்தேர்தலில் பணம் கொடுத்து வாக்குகளைப் பெறும் நடைமுறையைத் தவெக எதிர்க்கும். சென்னையில் வேலை செய்யும் மதுராந்தகம் தொகுதி இளைஞர்கள் தேர்தல் நாளில் சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க வேண்டும்.
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக பல்வேறு தரப்பினர் அரசியல் செய்து வருகின்றனர். இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் பேசுவது சங்கடமாக உள்ளது. சாதி, மத வேறுபாடின்றி அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கிய அரசியலே தவெகவின் நோக்கம் என்று அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் ஆனந்த் பேசுகையில், திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் எதிர்காலத்தில் காணாமல் போகும். தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தவெக வாக்கு வைப்புத் தொகையைப் பெறும். ஆட்சிக்கு வந்த 125 நாட்களில் ஊழலை ஒழித்துள்ளது. மக்களுக்கு சேவை செய்வதே தங்களது முக்கிய நோக்கம்.
அனைத்து சமூகங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் மரகதம் குமரவேலை வெற்றி பெறச் செய்வதே மக்களின் பணி. தொகுதியில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.
மக்கள் பணத்தில் ஒரு ரூபாய் கூட லஞ்சமாகப் பெற மாட்டோம். கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வீடு வீடாகச் சென்று தவெக அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துரைத்து, விசில் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்ய வேண்டும் என கட்சி நிர்வாகிகளிடம் அவர் கேட்டுக்கொண்டார்.