“ஏஐ வரவால் வழக்கறிஞர்களின் நிலை இன்னும் சவாலாகும்” - நீதிபதி என்.ஆனந்த வெங்கடேஷ் பேச்சு

மாநாட்டில் நூலை வெளியிட்ட நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள்.

மாநாட்டில் நூலை வெளியிட்ட நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள்.

படம்: ஜெ.மனோகரன்

Updated on
2 min read

கோவை: ஏஐ வரவால் வழக்கறிஞர்களின் நிலை இன்னும் சவாலாக இருக்கும் என கோவையில் நடைபெற்ற மாநாட்டில் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பேசினார்.

இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் 9-வது தமிழ்நாடு மாநில மாநாடு குனியமுத்தூர், புட்டுவிக்கி சாலையில் உள்ள அரங்கில் இன்று (செப்.19) நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, அம்பேத்கர் குறித்த நூலை வெளியிட்டார்.

இக்கூட்டத்தில் பேசுவதற்காக மைக் முன்பு வந்த அவர், பேச்சை தொடங்குவதற்கு முன்னர், ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ திரைப்படத்தில் வரும், "மனிதா மனிதா" பாடலுக்கான இசையை ஒலிக்க விட்டு, அந்த முழு பாடலையும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கறிஞர்கள் முன்னிலையில் பாடினார்.

அதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது: வரலாற்றில் நெருக்கடியான கட்டமைப்பு சிக்கலில் நீதித்துறை சிக்கித் தவிக்கின்றது. உச்ச நீதிமன்றம் வழக்கறிஞர் பணி உன்னத அடையாளம் கொண்டவை என்கின்றது.

வழக்கறிஞர் பணி என்பது உயர் சமூக மக்களிடையே அறிஞர்களாகவும், பாமர மக்களிடையே புரட்சி போராளியாகவும் பார்க்கப்படுகின்றனர். சட்டத்துறையில் சரிவு இருக்கிறது. மாநிலம் எங்கும் சட்டக் கல்லூரிகள் காளான்கள் போல உருவாகின்றன. இதனால் சட்டக்கல்வி பாதாளத்திற்கு செல்கின்றது. நாடு முழுவதும் 1500-க்கும் மேற்பட்ட சட்ட கல்லூரிகள் உருவாகி விட்டன. இதில் 27 தேசிய சட்ட பல்கலைக்கழகங்களும். தேசிய சட்ட பல்கலைக்கழகங்கள் வெறும் 5 சதவீத வழக்கறிஞர்களை மட்டுமே உருவாக்குகிறது. மீதி 95 சதவீத வழக்கறிஞர்கள் இரண்டாம் கட்ட சட்டக்கல்லூரிகளில் இருந்து உருவாகின்றனர்.

அரசியல், சட்டத்துறையில் நஞ்சாக பதிந்து விட்டது. பல மூத்த வழக்கறிஞர்கள் தங்களை அரசியல் கட்சிகாரர்களாக அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். வழக்கறிஞர்கள் நீதித்துறை பக்கம் தான் இருக்க வேண்டும்.

நீதித்துறையில் ஏஐ மொத்தமாக ஆட்டத்தை மாற்றப்போகின்றது. இப்போது எல்லாவற்றையும் ஏஐ செய்கின்றது. இனி வரும் காலத்தில் வழக்கறிஞர்களின் நிலை இன்னும் சவாலாக இருக்க போகிறது. வழக்கறிஞர்கள் ஆழ்ந்து படித்து, நடுநிலையாக இல்லாவிட்டால் ஏஐ அவர்களை தூக்கி சாப்பிட்டு விடும்.

உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்க இருக்கும் கொலிஜியம் முறை நீதித்துறை சுதந்திரத்துக்கு எனச் சொன்னாலும், அதில் வெளிப்படைத்தன்மை இல்லை. நேர்காணல்களோ, மதிப்பெண் என எதுவும் இல்லாமல் நீதிபதிகள் தேர்வு செய்யப்படுகின்றனர் என்பதே உண்மை. நீதித்துறைதான் ஏழை எளியவர்களுக்கான கடைசி நம்பிக்கை.

பார் கவுன்சில் சட்டக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பதை விடுத்து, இதை சுயேட்சையான ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும். வழக்கறிஞர்கள் சட்டத்தில், மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளை கொண்டு திருத்தம் செய்ய வேண்டும். உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு தகுதிப் புள்ளிகள், வெளிப்படையான அளவு புள்ளிகள் கொண்டு வர வேண்டும்.

சுற்றுச்சூழல், மனித உரிமைக்காக போராடும் வழக்கறிஞர்களுக்கு அரசு நிதி உதவி வழங்கிட வேண்டும். வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே இழந்த கண்ணியத்தை மீட்டெடுக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

<div class="paragraphs"><p>மாநாட்டில் நூலை வெளியிட்ட நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள்.</p></div>
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வழக்கு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in