

தவெக தலைவர் விஜய்
சென்னை: எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இந்த இரண்டு தொகுதிகளிலும் திமுக எம்.எல்.ஏக்களுக்கு எதிராக அவர் போட்டியிடுகிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. சில கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவிக்க வேண்டி உள்ளது. இந்நிலையில், இன்று (மார்ச் 29) சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை விஜய் அறிவித்தார்.
இந்த அறிவிப்பில் முதல் இரண்டு தொகுதிகளாக பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகள் அறிவிக்கப்பட்டன. இந்த இரண்டு தொகுதிகளிலும் விஜய் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். திங்கட்கிழமை முதல் தனது தேர்தல் பிரச்சாரத்தை அவர் தொடங்க உள்ளார். தமிழக அரசியல் களத்தில் தவெக மற்றும் திமுக இடையேதான் போட்டி என தனது அரசியல் மேடை பேச்சுகளில் விஜய் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். அதை வெளிப்படுத்தும் விதமாக தான் போட்டியிடும் இரண்டு தொகுதிகளிலும் திமுக எம்.எல்.ஏக்களுக்கு எதிராக விஜய் போட்டியிடுகிறார்.
பெரம்பூர் தொகுதி: வடசென்னை மக்களவை தொகுதியில் அமைந்துள்ளது பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி. கடந்த 2021 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.டி.சேகர் 1.05 லட்சம் வாக்குகளை பெற்று, ஐம்பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். இந்த முறை மீண்டும் தேர்தலில் போட்டியிட அவருக்கு திமுக வாய்ப்பு வழங்கி உள்ளது.
2019 இடைத்தேர்தலிலும் திமுக சார்பில் போட்டியிட்டு ஆர்.டி.சேகர் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுதியில் திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் பல்வேறு தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது.
திருச்சி கிழக்கு: திருச்சி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்றாக திருச்சி கிழக்கு தொகுதி அமைந்துள்ளது. 2021 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட இனிகோ இருதயராஜ், 94,302 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். சிட்டிங் எம்.எல்.ஏவான அவருக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கி உள்ளது திமுக. 2016 மற்றும் 2011 தேர்தல்களில் அதிமுக இந்த தொகுதியில் வெற்றி பெற்றது.