

குவஹாட்டி: லாக்-டவுனுக்கு வாய்ப்பு இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அசாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
“லாக்-டவுனுக்கு வாய்ப்பு இல்லை. தேசம் முழுவதும் நிலைமை சீராக உள்ளது. மற்ற நாடுகளில் இப்படி இல்லை. சர்வதேச அளவில் எரிபொருள் சார்ந்த நெருக்கடி நிலை எழுந்துள்ளது. பிலிப்பைன்ஸில் தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் எரிபொருள் விற்பனையில் 8 லிட்டர் என்ற வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் வீட்டில் இருந்து பணியாற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. வியட்நாமில் விமான இயக்க எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது, பாகிஸ்தானில் வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டுமே பணி என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் இப்படி இருக்கும் சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. நமது பிரச்சினைகளை நாம் தான் எதிர்கொள்ள வேண்டும். அந்த வகையில் பெட்ரோல், டீசல் மாதிரியான எரிபொருள் மற்றும் எல்பிஜி எரிவாயு தட்டுப்பாடு நாட்டில் இல்லை. வழக்கம் போலவே சந்தையில் அதன் விநியோகம் உள்ளது. தேசம் முழுவதும் அதை உறுதி செய்து வருகிறோம். அதற்கான பணியை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
உலக நாடுகளில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமே பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. கலால் வரியை குறைத்து சுமையை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. உலகில் வேறு எந்த நாடும் இதை செய்யவில்லை” என அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வர்த்தக சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது அது 70 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு தேவைகளுக்கான எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தில் வாடிக்கையாளர் முன்பதிவு செய்வதில் சில கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.