‘மண்ணச்சநல்லூர் பெண் உயிரை மாய்த்துக் கொண்டது உலுக்கவில்லையா?’ - ஸ்டாலினுக்கு விஜய் கேள்வி

விஜய் | கோப்புப் படம்

விஜய் | கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: ‘திமுகவின் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் நாடகத்தால், திருச்சி மண்ணச்சநல்லூரில் சகோதரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக வரும் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது. திமுகவினரின் ஆபாச வசவுகளைத் தாங்க இயலாமல், மண்ணச்சநல்லூரில் சகோதரி ஒருவர் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டார் என்கிற செய்தி உங்கள் மனசாட்சியை உலுக்கவில்லையா ஸ்டாலின் சார்?’ என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மக்களை ஏமாற்றுவதையே தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டுள்ள திமுக, தற்போதைய தேர்தலிலும் 8000 ரூபாய் கொடுப்பதாகவும், மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு அதைப் பயன்படுத்தி, வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொள்ளலாம் என்றும் கூறி வருகின்றனர்.

இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் எப்படியும் ஏமாற்றியாவது வெற்றியைப் பெற வேண்டும் என்று குட்டிக்கரணம் போட்டு வரும் திமுகவின் தோல்வி பயத்தின் அறிகுறி தான் எட்டாயிரம் ரூபாய் கூப்பன் அறிவிப்பு.

சாதாரண மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான தேர்தல் என்ன சதுரங்க வேட்டையா? உங்கள் அதிகாரப் பசிக்காக அப்பாவிகளை ஏமாற்றிப் பிழைக்க, இதென்ன இரிடியம் விற்பனையா? மக்களை ஏமாற்றும் மண்ணுளிப் பாம்பா அல்லது வாக்காளர்களை ஏமாற்றும் ரைஸ் புல்லிங்கா இந்த எட்டாயிரம் ரூபாய் கூப்பன்?

இன்று இந்த ஜனநாயக விரோத எட்டாயிரம் ரூபாய் கூப்பன் விநியோகம் செய்யும்போது திமுகவினரின் ஆபாச வசவுகளைத் தாங்க இயலாமல், மன உளைச்சலால் திருச்சி மண்ணச்சநல்லூரில் சகோதரி ஒருவர் தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டார் என்கிற செய்தி உங்கள் மனசாட்சியை உலுக்கவில்லையா ஸ்டாலின் சார்?

இந்தக் கொடூரச் செயலுக்குக் காரணமான கயவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். அத்தோடு மக்களை ஏமாற்றும் இத்தகைய சதிகாரச் சதுரங்க வேட்டை மோசடிகளைத் தேர்தல் ஆணையம் உடனடியாகத் தலையிட்டு, அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>விஜய் | கோப்புப் படம்</p></div>
எங்களை சரணடைய வைக்க முயல்வது தோல்வியையே தரும்: ஈரான் அதிபர் திட்டவட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in