“விஜய் அரை மணி நேரம் பேசினால் ஒரு மாதம் அதிர்கிறது!” - தவெக துணை பொதுச் செயலாளர் ராஜ்மோகன் நேர்காணல்
“வரலாறு நெடுகிலும் 'எங்களை அசைக்க முடியாது' என்று சொன்ன பல சாம்ராஜ்யங்கள், மக்களின் ஒரு விரல் புரட்சியில் சரிந்திருக் கின்றன. அந்தவகையில், அதிமுக, திமுக மற்றும் நடுநிலையாளர்களின் வாக்குகளை நாங்கள் வென்றெடுப்போம்” என்கிறார் தவெக துணை பொதுச்செயலாளர் ராஜ்மோகன். அவரிடம் ’இந்து தமிழ் திசை’க்காகப் பேசியதிலிருந்து...
இலவசங்களைக் கொடுத்து ஓட்டு வாங்கும் கட்சிகளின் வரிசைக்கு தவெக-வும் வருகிறதோ?
இலவசம் வேறு, மக்களின் அடிப்படை உரிமைகளை நிறைவேற்றுவது என்பது வேறு. எங்கள் தலைவர் விஜய், மாநாட்டிலேயே மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டார். கல்வி, மருத்துவம் மற்றும் அடிப்படைத் தேவைகள் தரமாக, எளிய மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்வது அரசின் கடமை. அதை 'இலவசம்' என்று கொச்சைப்படுத்த முடியாது. மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதுதான் எங்கள் லட்சியமே.
ஆனால், “முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும்” என்று விஜய்யை பகடி செய்கிறாரே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்?
அண்ணன் ஜெயக்குமார் நகைச்சுவையாகப் பேசுவதில் வல்லவர். ஆனால், எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தபோதும், ஜெயலலிதா தனித்து நின்றபோதும் இப்படித்தான் பலரும் பேசினார்கள். அன்று மட்டும் எப்படி மீசை முளைத்தது என்று அவர் சொல்வாரா? இப்படி 'மீசை முளைக்குமா' என்று கேட்பவர்களுக்கு, மக்கள் தேர்தல் தீர்ப்பின் மூலம் பதில் சொல்வார்கள்.
விஜய்யின் பின்னால் திரளும் இளைஞர்களை முன்னேற்ற என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?
இன்று தமிழக இளைஞர்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினை வேலையின்மையும், போதைப் பொருள் கலாச்சாரமும்தான். தவெக ஆட்சிக்கு வந்ததும், ஒவ்வொரு மாவட்டத்திலும் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைத்து, படித்த இளைஞர்களுக்குத் தகுதியான வேலைவாய்ப்பை உள்ளூரிலேயே உருவாக்குவோம். உடல் நலன், உள்ள நலன், உற்பத்தி நலன், குண நலன் பாதிக்கும் போதையை படிப்படியாக ஒழிப்போம். போதையற்ற தமிழகத்தைப் படைத்து, இளைஞர்களின் ஆற்றலை ஆக்கபூர்வமான வழியில் திருப்பத் திட்டங்கள் வைத்துள்ளோம்.
எந்தக் கொம்பனாலும் திமுக-வை அசைத்துக்கூடப் பார்க்க முடியாது என்கிறார்களே திமுக தலைவர்கள்..?
அது நம்பிக்கை அல்ல; அச்சத்தின் வெளிப்பாடு. வரலாறு நெடுகிலும் 'எங்களை அசைக்க முடியாது' என்று சொன்ன பல சாம்ராஜ்யங்கள், மக்களின் ஒரு விரல் புரட்சியில் சரிந்திருக்கின்றன. ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள். கோட்டைகள் நிரந்தரம் என்று நினைப்பது ஆணவம். மக்கள் மாற்றத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை திமுக-வினரும் உணரும் காலம் விரைவில் வரும்.
பெண்கள், இளைஞர்கள், நடுநிலையாளர்களின் வாக்குகள் பெருவாரியாக உங்களுக்கு கிடைக்கும் என எப்படி சொல்கிறீர்கள்?
பெண்கள் எங்கள் தலைவரை தங்கள் வீட்டில் ஒருவராக, சகோதரராக, மகனாகப் பார்க்கிறார்கள். அந்தப் பாசம் வாக்குகளாக மாறும். இளைஞர்களைப் பொறுத்தவரை, அவர்கள் நீண்ட காலமாக தங்களுக்கான ஒரு பிரதிநிதியைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அதை தளபதியிடம் காண்கிறார்கள். ஊழலற்ற, நேர்மையான, மதச்சார்பற்ற நிர்வாகத்தை மக்கள் விரும்புகிறார்கள். அந்த மாற்றுச் சக்தி தவெக மட்டும்தான் என்ற நம்பிக்கை மக்களிடம் ஆழமாக வேரூன்றி வருகிறது.
முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு தவெக-வுக்கு கட்டமைப்பு இருக்கிறதா?
கண்டிப்பாக. 1977-ல் எம்ஜிஆரும், ஆந்திராவில் என்டிஆரும் இதைச் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள். பலம் என்பது கட்சிக் கொடியின் வயதில் இல்லை. மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையில் உள்ளது. பூத் கமிட்டி முதல் மாநில நிர்வாகிகள் வரை எங்கள் கட்டமைப்பு வலுவாக உள்ளது.
விஜய்யை, 60 நாளில் அரை மணி நேரம் மட்டும் அரசியல் பேசிய அமெரிக்க மாப்பிள்ளை என நாதக விமர்சிக்கிறதே..?
அரசியல் என்பது தினமும் மைக்கில் கத்திப் பேசுவது மட்டும் அல்ல. சரியான நேரத்தில், சரியான இடத்தில், ஆணித்தரமாகத் தன் கொள்கையை முன்வைப்பதுதான் முதிர்ச்சியான அரசியல். எங்கள் தலைவர் செயலில் நம்பிக்கை கொண்டவர். அதனால்தான் அவர் பேசும் அந்த ‘அரை மணி நேரம்' ஒட்டுமொத்த இந்திய ஊடங்களையும் ஒரு மாதம் அதிர வைக்கிறது. நாங்கள் ’எலெக்ஷனை’ நோக்கி நகர்கிறோம். சிலர் ‘கலெக்ஷனை’ நோக்கி நகர்கிறார்கள்.
திமுக-வும் பாஜக-வும் உறவில் இருப்பதாக கூறும் விஜய், தனது பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிறாரே பொன்னார்..?
நாங்கள் ஊகத்தின் அடிப்படையில் எதையும் சொல்லவில்லை. கள யதார்த்தத்தையும், சில அரசியல் நகர்வுகளையும் வைத்தே அந்த விமர்சனத்தை முன்வைத்தோம். 'மத்திய அரசு' என்று எதிர்ப்பது போல் காட்டிக்கொண்டு, பாஜக-வுடன் இணக்கமாகச் செயல்படும் போக்கை மக்கள் கவனிக்கிறார்கள். எங்கள் பார்வையை மாற்றிக்கொள்ளச் சொல்வதை விட, அவர்கள் மறைமுக நண்பர்களான திமுக-வின் நிலைப்பாட்டை மக்களிடம் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்.
செங்கோட்டையனின் வருகை தவெக-வுக்கு எந்தளவுக்கு பலனைத் தரும்?
செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள், அரசியல் களத்தில் நீண்ட அனுபவம் கொண்டவர்கள். எங்களின் வேகம் மற்றும் கொள்கையின் மீது ஈர்ப்பு கொண்டு அவர் இணைந்திருப்பது, மாற்றுக்கட்சித் தலைவர்களுக்கும் எங்கள் மீதுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. இது கட்சிக்கு நிச்சயம் கூடுதல் பலம் சேர்க்கும்.
பிஹாரில் பாஜக கூட்டணியின் வெற்றிக்கு காரணம் எதுவாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?
எஸ்ஐஆர் ஒரு காரணம். பல லட்சம் வாக்குகளை நீக்கிவிட்டதாக செய்திகளில் பார்த்தேன். கூட்டணியை அவர்கள் கையாண்ட விதம் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், பிஹார் களம் வேறு, தமிழக களம் வேறு. இது சமூகநீதி மண். மதவாத அரசியலுக்கு இங்கு இடமில்லை. அந்த வெற்றியை வைத்து இங்கே கணக்குப்போட முடியாது.
