புதுச்சேரி தவெக பொதுக்கூட்டம்: மேடை, இருக்கைகள் இல்லை - க்யூ ஆர் கோடு இருந்தால்தான் அனுமதி!

புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள இடம்

புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள இடம்

Updated on
1 min read

புதுச்சேரி: கரூர் சம்பவத்தையடுத்து 2 மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டத்தில் பொதுமக்களை நாளை மறுநாள் (டிச.9) விஜய் சந்திக்கிறார். பிரச்சார வாகனத்தில் நின்று பேசவுள்ளார். இந்த பொதுக்கூட்டத்தில் மேடையும் இல்லை, தொண்டர்களுக்கு இருக்கையும் இல்லை, க்யூ ஆர் கோடு நுழைவுச்சீட்டு இருந்தால் மட்டுமே அனுமதி என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகம், புதுவையில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. தமிழக வெற்றிக் கழகமும் தேர்தலை சந்திக்க தீவிரமாக தயாராகி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் திருச்சியில் தவெக தலைவர் விஜய் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.

3வது நிகழ்ச்சியாக கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி கரூரில் தனது பிரச்சார வாகனத்தில் நின்றபடி உரையாற்றினார். அப்போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து விஜய் சுற்றுப்பயணம் தடைபட்டது.

புதுச்சேரியில் ரோடுஷோவுக்கு அனுமதி கிடைக்காத நிலையில், உப்பளம் துறைமுக வளாகத்தில் பிரச்சார பொதுக்கூட்டத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) விஜய் பேசுகிறார். சுமார் 2 மாதங்களுக்கு பிறகு அவர் மக்களை சந்தித்து பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.

வழக்கமாக பொதுக்கூட்டங்களில் மேடை, தொண்டர்களுக்கு இருக்கை அமைக்கப்படும். ஆனால் புதுவை உப்பளம் துறைமுக வளாக திடலில் தண்ணீரை வெளியேற்றி, மண்ணை கொட்டி சீரமைத்துள்ளனர். தொண்டர்கள் வந்து செல்ல கூடுதலாக துறைமுக வளாகத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு நுழைவு வாயில் அமைக்கப்பட்டு வருகிறது.

தவெக முக்கிய நிர்வாகிகளிடம் விஜய் புதுச்சேரி வருகை தொடர்பாக விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது:

துறைமுக வளாகத்தில் தவெக தலைவர் விஜய்க்கு மேடை இல்லை, தொண்டர்களுக்கு இருக்கை அமைக்கப்படவில்லை. பிரச்சார வாகனத்தில் நின்றபடியே விஜய் பேசுகிறார். கூட்டத்தில், தமிழகத்தின் வெளிமாவட்டங்களில் இருந்து தவெக தொண்டர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என போலீஸார் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

இதனால் புதுவை தவெக பொதுக்கூட்டத்துக்கு 5 ஆயிரம் பேரை மட்டுமே அனுமதிக்க தவெக திட்டமிட்டுள்ளது. இதற்காக கியூ ஆர் கோடுடன் நுழைவுச்சீட்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த சீட்டு புதுவை, காரைக்காலில் உள்ள தவெகவை சேர்ந்த தொகுதி, கிளை கழகங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. க்யூஆர் கோடு நுழைவுச்சீட்டு உள்ளவர்கள் மட்டுமே துறைமுக வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

திங்கள்கிழமை இரவு விஜய் பிரச்சார வாகனம் புதுவைக்கு வருகிறது. விஜய் கார் மூலம் செவ்வாய் காலை 11 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெறும் வளாகத்துக்கு வருவார் எனத் தெரிகிறது. பொதுக்கூட்டத்துக்கு 10.30 முதல் 12.30 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விஜய் சுமார் 12 மணியளவில் பேசுவார் என்கின்றனர்.

<div class="paragraphs"><p>புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள இடம்</p></div>
‘எங்கள் அரசு ஆன்மிகத்துக்கு எதிரியா?’ - திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து முதல்வர் பேச்சு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in