

சென்னை: 2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் தவெக தலைமை மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. பிப். 2-ம் தேதி முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட விஜய் தயாராகி வருகிறார். தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ள ‘விசில்’ சின்னத்தை வலுவான பிரச்சார ஆயுதமாக மாற்ற விஜய் திட்டமிட்டுள்ளார். மதுரை, கன்னியாகுமரி, நெல்லை அல்லது தென்காசியில் பிரச்சாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார்.
தொகுதிக்கு 3 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை தவெக தலைமை ஏற்கனவே தயார் செய்துள்ளது. தற்போது, போட்டியிட விருப்பம் உள்ளவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணிகளும் தொடங்கியிருக்கிறது. இப்பணிகள் முடிவடைந்து, இறுதிப் பட்டியல் தயாரானதும், தகுதியான வேட்பாளர்களுக்கு நேரடி நேர்காணல் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கட்சியின் 3-ம் ஆண்டு தொடக்க விழா பிப். 2-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை விஜய் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பட்டியலில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், மாவட்டச் செயலாளர்கள், பிரபலங்கள், தொழிலதிபர்களுக்கு முக்கிய இடங்கள் ஒதுக்கப்பட உள்ளதாகவும் தவெக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
சென்னையில் நேற்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, ‘‘தவெக வளர்ச்சியை பார்த்து திமுக பயப்படுகிறது. இந்நேரம் 32 மாவட்டங்களில் தலைவரின் சுற்றுப்பயணம் முடிந்திருக்க வேண்டும். கரூரில் செந்தில் பாலாஜியையும், சில சமூக விரோதிகளையும் வைத்து திமுக செய்த சூழ்ச்சியால்தான் அது தாமதமானது. அடுத்த வாரம் முதல் விஜய்யின் சுற்றுப்பயணம் தொடங்கப் போகிறது. என்ன சூழ்ச்சி செய்தாலும் அவரை தடுக்க முடியாது’’ என்றார்.