ரீல்ஸ் மோகத்தில் உள்ள தவெக அரசு இன்னும் மக்கள் பணியை தொடங்கவில்லை: செந்தில் பாலாஜி கருத்து

ரீல்ஸ் மோகத்தில் உள்ள தவெக அரசு இன்னும் மக்கள் பணியை தொடங்கவில்லை: செந்தில் பாலாஜி கருத்து
Updated on
1 min read

கோவை: ரீல்ஸ் மோகத்தில் உள்ள தவெக அரசு ரியல் ஆட்சியாக இன்னும் மக்கள் பணியை தொடங்கவில்லை என புதன்கிழமை அன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

கோவை தெற்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ. வி.செந்தில் பாலாஜி, ராமநாதபுரம் பகுதியில் புதன்கிழமை மாலை பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தவெகவினர் தொடர்ந்து திமுக குறித்து விமர்சித்து வருகின்றனர். திரையிலும், திரை உலகத்திலும், திரைப்படத்திலும் வசனங்கள் பேசலாம். ஆனால், முதல்வராக பொறுப்பேற்ற பிறகு என்ன அவசர தேவைகள் இருக்கிறதோ அவற்றை உணர்ந்து செயல்பட வேண்டும். அதுதான் முதல்வரின் கடமை.

தவெக அரசு திமுகவை விமர்சிப்பதை மட்டுமே குறியாக கொண்டிருக்கிறது. மக்களுக்கு கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தவில்லை. துறையின் அமைச்சர்களும், தங்களது துறையை எவ்வாறு முன்னெடுத்துச் செல்லலாம் என்று செயல்படவில்லை. தவெக அரசு மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டார்கள்.

மாற்றம் என்று கூறி மக்களை ஏமாற்றி வெற்று கவர்ச்சியில் மக்களிடம் ஓட்டுகளை வாங்கியுள்ளார்கள். மாற்றம் என்றால் என்னவென்று முதலில் அவர்கள் கூற வேண்டும். மகளிர் பாதுகாப்பு படையை அமைப்பேன் என்று முதல்வர் கூறிய நிலையில் மூன்று முறை அதை தள்ளி போட்டு உள்ளார். சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளில் நடவடிக்கை எடுப்பதற்கு ஆறு மாத காலம் பொறுத்திருக்க வேண்டுமா?

தேர்தலுக்கு முன்பு டாஸ்மாக் விஷயத்தில் மோசமாக நிகழ்ச்சிகளில் பாடினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது டாஸ்மாக் விவகாரத்தில் எவற்றை கட்டுப்படுத்தி விட்டார்கள்? தேர்தலுக்கு முன்பு வண்டி மீது ஏறி நின்று பொய்யான கருத்துக்களை கூறி அவதூறு பரப்பி பாட்டு எல்லாம் பாடினார்கள்? ஆனால் டாஸ்மாக் விவகாரத்தில் தற்போது வரை அந்த துறையின் அமைச்சர் விளக்கத்தை மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கிறார். அப்படி என்றால் அன்று பாடிய பாட்டுக்கு என்ன பதில்?

தவெக என்பது ரீல்ஸ் ஆட்சி. இன்னும் அவர்கள் ரீல்ஸ் மோகத்தில் தான் உள்ளார்கள். அமைச்சர்களும், அரசும் ரீல்ஸ் மோகத்தில் தான் உள்ளது. மக்களுக்கான ரியல் ஆட்சியாக இன்னும் அவர்கள் பணிகளை தொடங்கவில்லை. அவர்கள் பணியை தொடங்குவார்கள் என்ற நம்பிக்கையும் மக்களிடத்தில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

ரீல்ஸ் மோகத்தில் உள்ள தவெக அரசு இன்னும் மக்கள் பணியை தொடங்கவில்லை: செந்தில் பாலாஜி கருத்து
இந்தியாவில் பட்ஜெட் விலையில் Lava Bold N2 ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in