

தூத்துக்குடி: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணையுமாறு திமுகவினர் தன்னிடம் பல கோடி ரூபாய் பேரம் பேசியதாக, ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்எல்ஏ சரவணன் குற்றம்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரலில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஸ்ரீவைகுண்டத்தில் நான் வெற்றி பெற்றதை தொடர்ந்து அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக, அதிமுக, பாஜகவினர் கூட்டு சேர்ந்து சமூக வலைதளங்கள் மூலம் என் மீது பல குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு, திமுகவில் சேருமாறு சிலர் என்னிடம் தொடர்ந்து கூறி வருகின்றனர். திருநெல்வேலியைச் சேர்ந்த ஒரு தியேட்டர் உரிமையாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுடன் இருப்பவர்கள் என்னிடம் பேரம் பேசினர். ‘திமுகவில் சேர்ந்தால் ரூ.50 கோடிக்கு மேல் பணம், திமுக அரசு அமைந்தால் அமைச்சர் பதவி தருகிறோம். ராஜினாமா செய்யாவிட்டால் உங்களை என்ன செய்வோம் என்று தெரியாது’ என மிரட்டல் விடுக்கின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு எனது வாகனம் விபத்துக்கு உள்ளானதிலும் அவர்களது பங்கு இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.
ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக மற்றும் அதிமுகவினர் பல்வேறு ஊழல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மக்கள் பணியில் ஈடுபட்டுள்ள என்னை எப்படியாவது தடுக்க வேண்டும் என அவர்கள் கூட்டணி சேர்ந்து எனக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். இதற்கெல்லாம் நான் அடிபணிய மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது திமுகவினர் தன்னிடம் பேரம் பேசியதற்கான ஆடியோ ஆதாரம் ஒன்றையும் அவர் வெளியிட்டார். அதில், சரவணனிடம் பேசிய ஒரு நபர் 'நாம் நட்பு ரீதியாக பேசிக் கொள்ளலாம்’ என்று கூறுகிறார். அதற்கு சரவணன், ‘எனக்கு 50, 100 அல்ல, 500 கோடி கொடுத்தாலும் இதுமாதிரியான செயல் பிடிக்காது. யாருக்கும் நான் துரோகம் செய்யமாட்டேன். இருக்கிற இயக்கத்தில் உறுதியாக இருப்பேன்' என பதிலளிக்கிறார்.
ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவைத் தொடர்ந்து இவரும் குதிரை பேர சதி நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.