தவெக எம்எல்ஏ-விடம் பேரம் பேசிய விவகாரத்தில் மேலும் இருவர் கைது

ரூ.2.80 கோடி பறிமுதல்
தவெக எம்எல்ஏ-விடம் பேரம் பேசிய விவகாரத்தில் மேலும் இருவர் கைது
Updated on
1 min read

சென்னை: சட்டப்பேரவை தலைவருக்கு எதிரான தீர்மானத்தில் தவெக நிலப்பாட்டுக்கு எதிராக வாக்களிக்க தனக்கு ரூ.35 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக ஊத்தங்கரை சட்டப்பேரவை தொகுதியின் தவெக எம்எல்ஏ இளையராஜா அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சென்னை திருவல்லிக்கேணி போலீஸார், ஏற்கெனவே 12 பேரை கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு தொகுதி திமுக எம்எல்ஏ-வுமான செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. மேலும், சிங்கப்பூரில் இருந்து கொண்டு எம்எல்ஏ-க்களை இழுக்கும் வேலைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் லட்சுமணபெருமாள் என்பவருக்கு எதிராக ‘லுக் அவுட்’நோட் டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தனியார் தொலைக்காட்சியின் ஆசிரியர் ஒருவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி உள்ளனர். இந்நிலையில், கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது, தவெக ஆட்சியைக் கவிழ்க்கும் இந்தச் சதித் திட்டத்துக்கு ‘மேகாலயா புராஜெக்ட்’ என்று ரகசியப் பெயரிடப்பட்டது தெரியவந்துள்ளது. 15 தவெக சட்டப்பேரவை உறுப்பினர்களைப் பெருந்தொகை கொடுத்து விலைக்கு வாங்கி, ஆட்சியின் நிலைத்தன்மையைச் சீர்குலைப்பதே இவர்களின் நோக்கமாக இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

தற்போது இந்த வழக்கின் தொடர்ச்சியாக, கொரட்டூரைச் சேர்ந்த பைனான்சியர் கருணாநிதி, சாலிகிராமத்தைச் சேர்ந்த சரவணன், பள்ளிக்கரணையைச் சேர்ந்த வினோத் வெங்கடேசன் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இவர்களிடமிருந்து ரூ.2.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சதித் திட்டத்துக்கு மூளையாகச் செயல்பட்ட திருச்சியைச் சேர்ந்த நரேஷுடன் இவர்களுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதும், பறிமுதல் செய்யப்பட்ட பணம் ‘ஹவாலா’ முறையில் கொண்டு வரப்பட்டதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து கருணாநிதி மற்றும் சரவணன் ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர். இதன்மூலம் இந்த வழக்கில் கைது எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

கருணாநிதி உள்ளிட்ட 3 பேரின் செல்போன்கள் தற்போது சைபர் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் இந்த சதித் திட்டத்தில் வேறுயாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்த ஆதாரங்களைச் சேகரிக்கும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி: இந்நிலையில், சிறையில் உள்ள நரேஷ், ரமேஷ், கார்த்திக் ஆகிய 3 பேரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது போலீஸார் தரப்பில், ‘‘வழக்கு ஆரம்பகட்டத்தில் உள்ளது. இந்த வழக்கில் இன்னும் பலருக்கு தொடர்பு உள்ளது. ஜாமீன் வழங்கினால், விசாரணை பாதிக்கப்படும்’’ என்று வாதிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுதாரர்கள் 3 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தார்.

தவெக எம்எல்ஏ-விடம் பேரம் பேசிய விவகாரத்தில் மேலும் இருவர் கைது
“சோனம் வாங்சுக்கின் பொறுமையை சோதிக்கக் கூடாது” - மத்திய அரசுக்கு அண்ணா ஹசாரே வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in