

கோவை: திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கூறச் சொல்லி ரூ.15 லட்சம் பேரம் பேசியதாக கவுண்டம்பாளையம் தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் பேசினார்.
கவுண்டம்பாளையத்தில் நேற்று முன்தினம் நடந்த தவெக பொதுக் கூட்டத்தில் கனிமொழி சந்தோஷ் பேசியதாவது: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் திமுகவின் ‘கரூர் கம்பெனி’ என்று நான் குறிப்பிடும் தரப்பிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பிலான ஒரு பேக்கேஜ் என்னிடம் வந்தது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகதான் வெற்றி பெறும் என்று ஜோதிட ரீதியாக யூ டியூப் சேனலில் பேச வேண்டும் என்று என்னிடம் கூறப்பட்டது.
அப்போது நான் தவெகவில் இல்லை. இருந்த போதிலும், ‘திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது’ என்று நான் தெளிவாகக் கூறினேன். ஆனால், திமுகதான் வெற்றி பெறும் என்று சொல்ல வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. அரசியலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பணம் கொடுத்து ஜோசியம் மூலம் உருவாக்க முடியாது. மக்களின் தீர்ப்புதான் இறுதி தீர்ப்பு.
என்னைப் பற்றி பல்வேறு விமர்சனங்கள் வருகின்றன. ‘அழகான பொம்மை’ என்று சிலர் விமர்சிக்கிறார்கள். ஆனால் இந்த அழகான பொம்மை, தேவைப்பட்டால் ஆபத்தான பொம்மையாகவும் மாறும். தவெக அடுத்தடுத்த தேர்தல்களில் தனது வலிமையை நிரூபிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.