

லக்னோ: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த தவறான தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக சென்றுள்ள அவர், அங்குள்ள கல்லூரி ஒன்றில் மாணவர்களிடையே கலந்துரையாடினார். அப்போது இந்தியாவின் ஜனநாயக அமைப்பு, தேர்தல் நடைமுறைகளின் பின்னணி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் தொழில்நுட்பப் பாதுகாப்பு மற்றும் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் இளம் வாக்காளர்களின் பங்கு ஆகிய பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக உரையாற்றினார்.
வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்குத் தஞானேஷ் குமார் விரிவாகப் பதிலளித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் நாட்டின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களால் மிகவும் பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்படுபவை.
இந்த இயந்திரங்களில் இணையதளம், ப்ளூடூத், வைஃபை அல்லது எந்தவொரு வயர்லெஸ் தொடர்பு வசதிகளும் கிடையாது என்பதால் இவற்றை வெளியிலிருந்து யாரும் ஹேக் செய்யவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியாது.
தற்போதைய சமூக வலைதள காலத்தில் பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வரும் சூழலில், பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் எந்தவொரு செய்தியையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், அதனுடைய உண்மைத்தன்மையையும் தகவலின் ஆதாரத்தையும் முறையாகச் சரிபார்த்த பின்னரே ஏற்க வேண்டும். சுமார் 100 கோடி வாக்காளர்களைக் கொண்ட இந்தியாவில் இவ்வளவு பெரிய அளவிலான தேர்தலை நடத்துவது என்பது மிகப்பெரிய சவாலான காரியம்.
அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 326-ன் படி, 18 வயதைப் பூர்த்தி செய்த அனைத்து இளைஞர்களும் உடனடியாகத் தேர்தல் ஆணையத்தின் டிஜிட்டல் தளங்கள் வாயிலாகத் தங்களை வாக்காளர்களாகப் பதிவு செய்ய வேண்டும். இளைஞர்கள் தாங்கள் மட்டும் வாக்களிப்பதோடு நின்றுவிடாமல், தங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும் வாக்களிக்க ஊக்கப்படுத்த வேண்டும்; நாட்டின் ஜனநாயக எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கிய ஆற்றலாக இளைஞர்களே திகழ்கின்றனர்" என்று கூறினார்.
முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அந்நாட்டின் தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாகப் பேசும்போது இந்தியாவின் தேர்தல் முறையையும் இந்தியத் தலைமைக் தேர்தல் ஆணையரின் நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டிப் பாராட்டியிருந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் இந்த விளக்கம் முக்கியத்துவம் பெறுகிறது.