“கும்பகர்ணன் போல தூங்கியதால்தான் அதிமுகவுக்கு மூன்றாமிடம்” - பழனிசாமிக்கு செங்கோட்டையன் பதில்

அமைச்சர் செங்கோட்டையன்

அமைச்சர் செங்கோட்டையன்

Updated on: 
1 min read

ஈரோடு: கும்பகர்ணன் போல தூங்கியதால்தான் அதிமுக மூன்றாம் இடத்துக்கு சென்றுள்ளது என வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த பங்களாபுதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழாவை ஒட்டி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் கேக்குகளை அமைச்சர் செங்கோட்டையன் இன்று வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தவெக கும்பகர்ணனைப் போல தூங்கிக் கொண்டிருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கும்பகர்ணன்போல அதிமுக தூங்கியதால்தான் தேர்தலில் மூன்றாம் இடத்துக்கு சென்றுவிட்டது.

தேர்தல் களத்தில் மக்கள் என்ன தீர்ப்பு வழங்கி உள்ளனர் என்பதை பழனிசாமி புரிந்துகொள்ள வேண்டும். 81 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அதிமுக, தற்போது 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளது என்பதை அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

சட்டம் - ஒழுங்கை பற்றி ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை, ‘அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடைமையடா, ஆறிலும் சாவு, நூறிலும் சாவு, தாயகம் காப்பது கடமையடா’ என்ற முறையில்தான் முதல்வர் விஜய் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறார். மக்களுக்கு நல்லாட்சியைத் தருவதற்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.

இனி தமிழகத்தை ஆள்வதற்கு ஒரே ஒரு தலைவர்தான் என்பதை மக்கள் தீர்மானித்துள்ளனர். எந்தத் தேர்தல் வந்தாலும் விஜய்தான் வெற்றி பெறுவார். அதிமுகவில் இருந்து சிலர் வருவார்கள் என்றுதான் குறிப்பிட்டேன். எம்எல்ஏக்கள் வருவார்கள் என்று நான் எப்போதும் சொல்லவில்லை” என்று அவர் கூறினார்.

விஜயபாஸ்கர் மீது சிபிஐ குற்றச்சாட்டுகள் பதிவு செய்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “பொதுவாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதும், வழக்கு நடைபெறுவதும் சகஜம். வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டால்தான் எதையும் உறுதியாக சொல்ல முடியும். இன்னும் குற்றப்பத்திரிகைகூட தாக்கல் செய்யவில்லை.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகுதான் அந்தக் கேள்வி கேட்கப்பட வேண்டும். செந்தில் பாலாஜியை பற்றி ஏன் யாரும் கேள்வி கேட்பதில்லை? அவர் எல்லாம் என்னென்ன குற்றங்கள் செய்துள்ளார். ஏன் அவரைப் பற்றி நீங்கள் கேட்பதில்லை” என செங்கோட்டையன் பதிலளித்தார்.

<div class="paragraphs"><p>அமைச்சர் செங்கோட்டையன்</p></div>
“தவெகவும் பாலியல் குற்றங்களும் என்ற தலைப்பில் புத்தகமே எழுதலாம்” - தினகரன் விமர்சனம்

X