

சென்னை: ‘தவெகவும் பாலியல் குற்றங்களும் என்ற தலைப்பில் புத்தகமே எழுதலாம் என்ற அளவுக்கு நாள்தோறும் பாலியல் குற்றச் சம்பவங்கள் நடைபெறுகிறது’ என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தவெகவும் பாலியல் குற்றங்களும் என்ற தலைப்பில் புத்தகமே எழுதலாம் என்ற அளவுக்கு நாள்தோறும் பாலியல் குற்றச் சம்பவங்கள் நடைபெறுகிறது. ‘ஆல் இஸ் வெல்’ முதல்வர் தவெகவினரிடம் இருந்து பெண்களை எப்படிப் பாதுகாக்கப் போகிறார்?
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் தவெக மாவட்டச் செயலாளர் தங்களிடம் தகாத முறையில் பேசுவதாகக் குற்றம்சாட்டி, அவரது அலுவலகத்தின் முன்பாகவே தவெக பெண் நிர்வாகிகள் ஒன்றுதிரண்டு போராட்டம்; கோவை மாவட்டம், காரமடை தவெக ஒன்றிய செயலாளர், ஆலோசனைக் கூட்டம் என்ற பெயரில் அழைத்து தன்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக பெண் நிர்வாகி ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் என நாள்தோறும் தவெக நிர்வாகிகள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
இந்த நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களுக்கு சமரசம் இல்லை என சொன்ன தவெக தலைவர் விஜய் இக்குற்றச்சாட்டுகளின் மீது நடவடிக்கை எடுப்பாரா அல்லது தற்போது குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் தவெகவினர் என்பதால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ‘ஆல் இஸ் வெல்’ சொல்வாரா?
தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், அவர்களை மேலும் ஊக்குவிப்பது போல் நடந்துகொள்வதும், ஆளுங்கட்சி என்ற மமதையில், தவெகவின் அடிமட்ட நிர்வாகிகள் தொடங்கி மாவட்டச் செயலாளர்கள் வரை பெண்களுக்கு எதிராகப் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவதாக எழும் புகார்களைக் கண்டும் காணாமல் கடந்து செல்லும் கட்சித் தலைவராகவும், தமிழக முதலமைச்சராகவும் இருக்கும் விஜய்யின் அணுகுமுறை கடும் கண்டனத்துக்குரியது.
இதற்கிடையில், திருப்பூர் வீரபாண்டியில் 11 வயது சிறுமி கடத்தப்பட்டுப் பாலியல் வன்கொடுமை, விழுப்புரத்தில் பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து 16 சவரன் நகைக் கொள்ளை, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையின் நிதி 22 கோடி டிஜிட்டல் திருட்டு, மதுரையில் பிரபல நகைக்கடையில் 500 பவுன் நகைத் திருட்டு, திருவாரூரில் ஏழு பேராசிரியர்கள் வீட்டில் கொள்ளை, நாமக்கல் பள்ளிபாளையம் அருகே நள்ளிரவில் ஏழு வீடுகளில் கொள்ளை முயற்சி...
காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் வசூல் பணம் 1.5 கோடி கொள்ளை, செஞ்சியில் மாயமான சிறுமியை ஒரு மாதம் கடந்தும் கண்டுபிடிக்க முடியாமல் திணறும் காவல்துறை என அடுத்தடுத்து அரங்கேறும் கொலை, கொள்ளை மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்களும், அதனை கண்டறிந்து தடுக்க வேண்டிய காவல்துறையின் மெத்தனப்போக்கும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீரழிவை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துவதுடன், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா? அது முதல்வரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா என்ற கேள்விகளையும் எழுப்புகின்றன.
எனவே, குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் தனது சொந்தக் கட்சியினராகவே இருந்தாலும், அவர்கள் மீது எவ்விதப் பாரபட்சமுமின்றிக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதே குற்றங்களைக் குறைக்கவும், எதிர்காலத்தில் அவை நிகழாமல் தடுக்கவும் உதவும் என்பதை இனியாவது உணர்ந்து, சீர்குலைந்துள்ள தமிழகத்தின் சட்டம் ஒழுங்கைச் சீரமைக்கவும், இத்தகைய குற்றச்சம்பவங்களுக்குக் காரணமான தவெகவினர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவும் முதலமைச்சர் விஜய்யை வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.