

ஓபிஎஸ்
சென்னை: ‘தமிழகம் முழுவதும் அதிகார போதையால் தவெகவினர் நடத்தி வருகிற அட்டூழியங்களைக் கூர்ந்து கவனிக்கும்போது, இங்கு, அரசு என்று ஒன்று செயல்படுகிறதா என்ற பலத்த சந்தேகம் பொது மக்களிடையே ஏற்பட்டுள்ளது’ என முன்னாள் முதல்வரும், திமுக எம்எல்ஏவுமான ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ‘த.வெ.க - வின் சில அமைச்சர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல தொண்டர்கள் கடந்த ஆறு மாத காலங்களில், தமிழ்நாடு முழுவதும் அதிகார போதையால் நடத்தி வருகிற அட்டூழியங்களைக் கூர்ந்து கவனிக்கும்போது, இங்கு, அரசு என்று ஒன்று செயல்படுகிறதா என்ற பலத்த சந்தேகம் பொது மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
த.வெ.க. வினர் குறுநில மன்னர்கள் போல் ஆங்காங்கு குத்தாட்டம் போட்டு வருகிறார்கள் என்ற செய்திகள் தினமும் வெளிவந்த வண்ணம் உள்ளன. நேற்றையதினம் பெரியகுளம் சோத்துப்பாறை அணையினை எவ்வித அரசு ஆணையோ, தேனி மாவட்ட ஆட்சியரின் அனுமதியோ இல்லாமலும், பொதுப்பணித்துறையின் ஒப்புதல் இல்லாமலும், முழுமையாக நீர்நிரம்பாத நிலையில் த.வெ.க.வின் தேனி மாவட்ட இணைச் செயலாளர் மற்றும் பல தவெக-வினர், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினரது வழிகாட்டுதலின்படி தன்னிச்சையாகத் திறந்துவிட்டதோடு மட்டுமின்றி, ரீல்ஸ்-ம் அவர்கள் வெளியிட்டிருப்பதாக வீடியோ பதிவுகள் வெளிவந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
அப்பகுதி விவசாயிகள் தண்ணீர் கோராமலேயே இவ்வாறு தவெக-வினர் தண்ணீர் திறந்துவிட்டுள்ளது அப்பகுதி விவசாயிகளிடையே கடுங்கோபத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுப் பணித்துறையினர் இதுகுறித்து காவல் துறையில் புகார் அளித்துள்ளதாகத் தெரிகிறது.
காவிரி நீரைப் பெறுவதற்காக தவெக அரசு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல், நமது மாநிலம் கர்நாடக மாநிலத்தை கையேந்தி நிற்கக்கூடிய இச்சூழலில், தண்ணீரின் முக்கியத்துவம் அறியாமல் 3500 ஏக்கருக்கும் மேல் பாசன வசதி அளிக்கிற சோத்துப்பாறை அணை நீரை வீணாக்கியது மிகவும் கண்டனத்துக்குரியது.
இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்காமல், சொந்தக் கட்சியினர் என்று முதல்வர் கருணை காட்டுவது, ஏற்கெனவே சீரழிந்துள்ள மோசமான சட்டம் ஒழுங்கினை மேலும் பாதிப்படையச் செய்யும்.
இந்த அவல ஆட்சியில், அணைக்கும் பாதுகாப்பில்லை. ஆட்சியருக்கும் பாதுகாப்பில்லை. கஜானாவிற்கும் பாதுகாப்பில்லை, காவல் துறையினருக்கும் பாதுகாப்பில்லை. குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லை. குடிமக்களுக்கும் பாதுகாப்பில்லை. மொத்தத்தில், தமிழ்நாடு பாதுகாப்பற்ற மாநிலமாக தொடர்ந்து இருந்து வருவது வேதனையளிக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.