

சென்னை: லயோலா கல்லூரியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கும் மையத்துக்குள் ஆம்புலன்ஸ் வாகனம் சென்றதையடுத்து, சந்தேகமடைந்த தவெக நிர்வாகிகள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளில் பொதுமக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் ராணிமேரி கல்லூரி ஆகிய மூன்று இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, லயோலா கல்லூரி மையத்தில் அண்ணாநகர், வில்லிவாக்கம், கொளத்தூர், பெரம்பூர், ஆயிரம் விளக்கு மற்றும் எழும்பூர் ஆகிய 6 தொகு திகளின் வாக்குப் பதிவு இயந்திரங்கள் 'ஸ்ட்ராங் ரூமில்' வைக்கப்பட்டு, அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் சீல வைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மையத்திலும் 4 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதில் சுழற்சி முறையில், 30 மத்திய துணை ராணுவப் படை வீரர்கள், உதவி ஆணையர் தலைமையில் 15 தமிழ்நாடு சிறப்புப் படை வீரர் கள், 40 ஆயுதப்படை வீரர்கள், 50 சட்டம்- ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீஸார் என மொத்தம் 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் இரவு, பகலாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு பணியாற்றும் காவலர்கள் மற்றும் ஊழியர்களுக்காகச் சிறப்பு மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.
திமுக, அதிமுக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் முகவர்கள் உரிய அனுமதி பெற்று, அங்குள்ள கட்டுப்பாட்டு அறை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு மருத்துவத் தேவைக்காக ஆம்புலன்ஸ் ஒன்று லயோலா கல்லூரி வளாகத்துக்குள் சென்றதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட தவெக நிர்வாகிகள், ஆம்புலன்ஸ் உள்ளே செல்வதில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
தவெகவினர் பிடிவாதம்: மேலும், அவர்களிடம் முறையான அனுமதி கடிதம் இல்லாத நிலையிலும், அடையாள அட்டையை மட்டுமே காட்டி உள்ளே செல்ல அனுமதிக்கு மாறு அவர்கள் பிடிவாதம் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து, அனுமதி கடிதம் இன்றி உள்ளே நுழைய முடியாது என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்த போலீஸார், விதிகளை மீற வேண்டாம் என தவெக நிர்வாகிகளுக்கு கண்டிப்புடன் அறிவுரை வழங்கி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.