

செங்கோட்டையன்
சென்னை: “தவெக தலைவர் விஜய் 500 கோடி வருமானத்தை விட்டுவிட்டு மக்களுக்கு சேவையாற்ற வந்துள்ளார்” என தவெக மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசினார்.
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சரளையில் இன்று (வியாழக்கிழமை) தவெக சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்காக தவெக தலைவர் விஜய், இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக கோவைக்கு வந்தார்.
கோவை விமான நிலையத்தில் இருந்து விஜய் வெளியில் வந்ததும் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களை பார்த்து விஜய் கையசைத்தபடி வந்ததது குறிப்பிடத்தக்கது. பின்னர், மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் தவெக மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசும்போது, “கடலென கூடியுள்ள கூட்டத்தை பார்க்கும்போது வரலாறு படைக்கும் கூட்டமாக தெரிகிறது.
விஜய் மனிதநேயம் மிக்கவர், உங்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பவர். 500 கோடி வருமானத்தை விட்டுவிட்டு மக்களுக்கு சேவையாற்ற வந்துள்ளார் தவெக தலைவர் விஜய்.
உலக வரலாற்றில் ஒரு புரட்சி தலைவரை பார்த்தேன், பின்னர் புரட்சி தளபதியை பார்க்கிறேன். தமிழகத்தில் ஆட்சிக்கு வர சிலர் கனவு கண்டு வருகிறார்கள். ஆனால், தமிழகத்தை ஆளப்போவது விஜய் தான். இந்தக் கூட்டம் வெற்றி வரலாற்றை படைக்கும் கூட்டம்.
234 தொகுதிகளிலும் தவெக தலைவர் யாரை விரல் காட்டுகிறோரோ, அவர்தான் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினர் என்ற சாதனையை படைக்கும் அளவிற்கு வெற்றியைத் தேடித் தாருங்கள்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், சட்டை பாக்கெட்டில் ஜெயலலிதா படமும், தவெக கரை வேட்டியுடனும் செங்கோட்டையன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.