இண்டியா கூட்டணி கூட்டத்தில் தவெக பங்கேற்பு: ஞானேஷ்குமாருக்கு எதிராக போராட்டம் நடத்த தீர்மானம்

இண்டியா கூட்டணி கட்சிகளின் மாநில அளவிலான தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், தவெக சார்பில் ஆதவ் அர்ஜூனா, விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், இந்தியக் கம்யூனிஸ்ட் தேசியக் குழு உறுப்பினர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் ஆகியோர் பங்கேற்றனர்

இண்டியா கூட்டணி கட்சிகளின் மாநில அளவிலான தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், தவெக சார்பில் ஆதவ் அர்ஜூனா, விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், இந்தியக் கம்யூனிஸ்ட் தேசியக் குழு உறுப்பினர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் ஆகியோர் பங்கேற்றனர்

Updated on: 
2 min read

சென்னை: தமிழக அளவில் நடைபெற்ற இண்டியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் ஆளும் தவெக பங்கேற்றது. இந்தக் கூட்டத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக அக்.13, 14, 15-ம் தேதிகளில் தொடர் போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இண்டியா கூட்டணியில் உள்ள தமிழக கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தவெக சார்பில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு: இண்டியா கூட்டணியில் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ள தவெகவை கூட்டணிக் கட்சிகள் மனப்பூர்வமாக வரவேற்கின்றன. இந்த அரசியல் முடிவை எடுத்த முதல்வர் விஜய்க்கு மனமார்ந்த பாராட்டுகள். சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) என்ற பெயரில் நாடாளுமன்ற ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் வகையிலும், தகுதியான 13 கோடி வாக்காளர்களின் வாக்குரிமையைப் பறிக்கும் வகையிலும் செயல்படும் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கும், அதன் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கும் கடும் கண்டனம்.

தேர்தல் ஆணையத்தைக் கருவியாகப் பயன்படுத்தி ஜனநாயகத்துக்கு எதிராகச் செயல்படும் பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா கூட்டணியைக் கண்டிப்பதோடு, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

ஜனநாயகப் படுகொலையை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில், ‘ஜனநாயகத்தைக் காப்போம்’ என்ற பெயரில் அக்.13, 14-ம் தேதிகளில் தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இண்டியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதன் தொடர்ச்சியாக, 15-ம் தேதி சென்னை மாவட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் தமிழக இண்டியா கூட்டணியின் முன்னணித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்பார்கள். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியதாவது: ஆர்எஸ்எஸ், பாஜக, அமித் ஷா மற்றும் பிரதமர் மோடியின் அட்டூழிய ஆட்சியை எதிர்த்து யாரெல்லாம் நிற்கிறீர்களோ, அவர்கள் அனைவரும் இண்டியா கூட்டணிக்கு வாருங்கள். இது 2023-ம் ஆண்டில் இருந்தே நாங்கள் தொடர்ந்து நடத்தி வருகின்ற சண்டை.

தமிழகத்தில் இண்டியா கூட்டணி மிக வலுவாக உள்ளது. வரும் 6-ம் தேதி டெல்லியிலும் எங்கள் போராட்டம் தொடரும். எம்.பி.கள் அனைவரும் தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கிப் பேரணியாகச் சென்று அங்கு மாபெரும் ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளோம். களத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் ஞானேஷ்குமாரின் கூட்டணியை எதிர்த்து நாங்கள் உறுதியோடு நிற்கிறோம். இவ்வாறு மாணிக் கம் தாகூர் தெரிவித்தார்.

முன்னதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில், ‘‘பாஜக அரசின் ஏவுதலில் செயல்பட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம்செய்ய வேண்டும்’’ என்றார்.

திமுக போராட்டம்: திமுக செய்தித் தொடர்பு குழுத் தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் கூறியதாவது: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் ஆகியவற்றுக்கு எதிராக மக்களும், அனைத்து எதிர்க்கட்சிகளும் உள்ளன.

இந்த விவகாரங்களுக்கு எதிராக நாங்களும் இருக்கிறோம். நாங்களும் அதை எதிர்ப்போம். ஆனால், அதை எதிர்ப்பதற்கு நாங்கள் இண்டியா கூட்டணியில் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. எங்களுக்கு என்று சொந்தக் கொள்கைகள் உள்ளன.

நாடாளுமன்றத்தில் பாஜகவை இந்த அனைத்துக் காரணங்களுக்காகவும் நாங்கள் எதிர்ப்போம். மேலும் ஞானேஷ் குமாருக்கு எதிராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரைப் பதவியில் இருந்து நீக்குவது மிகவும் அவசியம். நாடாளுமன்றத்தில் இதற்காக நாங்கள் போராடுவோம். அதற்கு நாங்கள் இண்டியா கூட்டணியுடன் சேர்ந்து செல்ல வேண்டிய அவசியமில்லை.

எங்களால் தனியாகவே போராட முடியும். இண்டியா கூட்டணிக்குள் இருக்கும் சில கட்சிகளும் நாங்கள் அந்தக் கூட்டணியில் அங்கமாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றன. ஆனால் இண்டியா கூட்டணிக்குக் காங்கிரஸ் தலைமை வகிக்கிறது என்பதால், நாங்கள் தனியாகச் செயல்படுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>இண்டியா கூட்டணி கட்சிகளின் மாநில அளவிலான தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், தவெக சார்பில் ஆதவ் அர்ஜூனா, விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், இந்தியக் கம்யூனிஸ்ட் தேசியக் குழு உறுப்பினர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் ஆகியோர் பங்கேற்றனர்</p></div>
தாராபுரத்தில் இன்று விஜய் 30 கி.மீ. ‘ரோடு ஷோ’

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in