

சென்னை: தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. அப்போது, தவெக அரசின் நடப்பு நிதி ஆண்டுக்கான முதல் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நாளை வேளாண் பட்ஜெட் தாக்கலாகிறது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று சில கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய், புதிய முதல்வராக கடந்த மே 10-ம் தேதி பதவியேற்றார். புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் கடந்த ஜூன் 19-ம் தேதி தொடங்கியது. அதன்பின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜூன் 23-ம் தேதி வரை நடத்தப்பட்டு, பின்பு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் நடப்பு நிதி ஆண்டுக்கான(2026-27) பொது பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்காகச் சட்டப்பேரவை இன்று (ஆகஸ்ட் 5) கூடுகிறது. அதன்படி காலை 10 மணிக்கு கூடும் கூட்டத்தில், பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்கிறார். நாளை வேளாண் பட்ஜெட்டை துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்கிறார்.
அடுத்த சில நாட்கள் இரண்டு பட்ஜெட் மீதான விவாதமும், அமைச்சர்களின் பதிலுரையும் இடம்பெறும். பேரவைக் கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது இன்று மதியம் நடைபெறும் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்படும்.
தவெக அரசின் முதல் பட்ஜெட் என்பதால் திட்டங்கள் பொதுமக்களை கவரும் வகையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் மகளிர் உரிமைத் தொகை உயர்வு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டங்கள் உட்பட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
பட்ஜெட் மீதான விவாதம் முடிந்தவுடன் தொடர்ந்து துறைகள் வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதமும் அமைச்சர்களின் பதிலுரையும் இடம்பெறும். இதற்காக சுமார் ஓரு மாதம் வரை சட்டப்பேரவைக் கூட்டம் நடத்த வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.