அரசுப் பேருந்துகளில் 'விடியல்' நீக்கம் - ‘மகளிர் பயணம்’ என பெயர் மாற்றிய தவெக அரசு

அரசுப் பேருந்துகளில் 'விடியல்' நீக்கம் - ‘மகளிர் பயணம்’ என பெயர் மாற்றிய தவெக அரசு
Updated on
1 min read

சென்னை: திமுக அரசு கொண்டு வந்த ‘மகளிர் விடியல் பயணம்’ என்ற திட்டத்தின் பெயரை ‘மகளிர் பயணம்’ என தவெக அரசு மாற்றியிருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது. இதற்கு, ”திமுக அரசு வைத்த எல்லா பெயர்களையும் மாற்றுவதையே நோக்கமாக வைத்துள்ளனர்” என திமுக சாடியுள்ளது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, அரசுப் பேருந்துகளில் மகளிருக்கான இலவசப் பயணத் திட்டத்தின் பெயரில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய திமுக ஆட்சியில் ‘மகளிர் விடியல் பயணம்’ என்று அழைக்கப்பட்ட இத்திட்டம், தற்போது தவெக அரசின் கீழ் ‘மகளிர் பயணம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், முந்தைய அரசின் அரசியல் அடையாளங்களை மாற்றும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், திமுகவின் முக்கிய திட்டங்களில் ஒன்றான ‘மகளிர் விடியல் பயணம்’ என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, தற்போது சுருக்கமாக ‘மகளிர் பயணம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதை திமுகவினர் கடுமையாக சாடி வருகின்றனர். ஏற்கெனவே ‘நான் முதல்வர் திட்டம்’ பெயர் நீக்கப்பட்டது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. திமுக அரசின் திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டாலும், மகளிருக்கான இலவசப் பேருந்து பயணம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் எவ்வித தடையுமின்றித் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்பது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில், திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது, “தவெக அரசு வெறும் பெயர் மாற்றத்துக்கான கட்சியாக மட்டுமே உள்ளது. திமுக அரசு வைத்த எல்லா பெயர்களையும் மாற்றுவதையே நோக்கமாக வைத்துள்ளனர்.

இந்த திட்டங்களையும் எப்படி செயல்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தவெக கொடுத்த வாக்குறுதிகளையே நிறைவேற்றவில்லை. விவசாயிகள் உள்ளிட்டோர் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

அரசுப் பேருந்துகளில் 'விடியல்' நீக்கம் - ‘மகளிர் பயணம்’ என பெயர் மாற்றிய தவெக அரசு
“எம்எல்ஏக்களை வாங்குவதை விடுத்து கர்நாடகாவிடம் நமக்கான நீரை வாங்க கவனம் செலுத்தவும்” - உதயநிதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in