

சென்னை: கட்சி தொடங்கி இரண்டரை ஆண்டுகளில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக அந்தஸ்து வழங்கியுள்ளதுடன், விசில் சின்னத்தையும் உறுதி செய்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முதல்வர் விஜய் 2024-ம் ஆண்டு பிப்.2-ம் தேதி ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார். அதைத்தொடர்ந்து, சட்டப்பேரவை தேர்தலில் விசில் சின்னத்தில் தனித்து போட்டியிட்டு, 108 இடங்களைக் கைப்பற்றினார். பின்னர், காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவோடு முதல்வராகப் பொறுப்பேற்றார்.
இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அந்தஸ்தை தவெக பெற்றுள்ளது. பொதுவாக மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற, சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்தது 6 சதவீத ஓட்டுகளுடன் 2 எம்எல்ஏக்களைப் பெற வேண்டும். இல்லையெனில், மக்களவைத் தேர்தலில் 6 சதவீத ஓட்டுகளுடன் ஒரு தொகுதியாவது வென்றிருக்க வேண்டும். அல்லது வெற்றி பெறாவிட்டாலும் 8 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகம் சந்தித்த முதல் சட்டப்பேரவைத் தேர்தலிலேயே 35.02 சதவீதத்துடன் 1.8 கோடி வாக்குகளைப் பெற்று ஆட்சியமைத்துள்ளதால், மாநில அந்தஸ்தை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது. அதேபோல், தவெகவுக்கான சின்னம் ‘விசில்’ என்பதையும் இந்திய தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.
தற்போது, தமிழகத்தில் திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், தேமுதிக ஆகிய 6 கட்சிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அங்கீகாரம் உள்ளது. அந்த வரிசையில் தற்போது தவெக, 7-வது கட்சியாக உருவெடுத்துள்ளது.
முதல்வர் விஜய் அறிக்கை: தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முப்பதாண்டுகளுக்கும் மேலாக அளவற்ற அன்பை வாரி வழங்கி, வாழ்வில் கிடைத்தற்கரிய ஓர் உயரிய இடத்தைப்
பேரன்புடன் தந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவனாக, உறவாக, மகனாக, அண்ணனாக,தம்பியாக ஒவ்வோர் இல்லத்திலும் உள்ளத்திலும் ஒரு நிரந்தர இடத்தை வழங்கி, தாயன்புடன் தாங்கி வருகின்றீர்கள். தமிழக மக்களுக்கும் உலகத் தமிழ் உறவுகளுக்கும் என் நன்றியை எப்படித் திருப்பிச் செலுத்துவது என்று யோசித்தேன்.
அதன் வெளிப்பாடாகவே, உங்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே 2024-ம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கினேன். தமிழக அரசியல் வரலாற்றில் எவருக்கும் கிடைத்திராத ஒரு பேரதிசயத்தை, கடந்த சட்டமன்றத் தேர்தலில் நிகழ்த்திக் காட்டினீர்கள். 35 சதவீத வாக்குகளுடன் தனிப்பெரும் கட்சியாகத் தவெக-வை உயர்த்திப் பிடித்தீர்கள்.
உங்கள் தீர்ப்பை மதித்த ஜனநாயக சக்திகளின் ஆதரவுடன் தமிழக மக்களின் முதல்வராக உங்கள் விஜய் உள்ளேன். இந்தியத்தேர்தல் ஆணையம் உங்கள் தமிழக வெற்றிக் கழகத்தை, தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக அறிவித்துள்ளது.
ஜனநாயகப் புரட்சியை சத்தமில்லாமல் நிகழ்த்திய உங்கள் விசில் சின்னத்தையும் த.வெ.க.வின் சின்னமாக அங்கீகரித்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையுடன் நம்மை நம்புகிற ஒட்டுமொத்த மக்களுக்கான நன்றிக்கடன் பணி என்றென்றும் தொடரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.