

சென்னை: பள்ளி பாடத்திட்ட வடிவமைப்புக் குழுவில் தவெக நிர்வாகி சேர்க்கப்பட்டுள்ள விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வியில் 1 முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களை மாற்றியமைக்க கடந்த திமுக ஆட்சியில் பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, பள்ளி பாடத்திட்ட வடிவமைப்புக் குழுவை மாற்றி, புதிய குழு அமைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை நேற்று முன்தினம் அறிவித்தது.
அதன்படி இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் 17 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய குழுவில் தவெக செய்தித் தொடர்பாளராக உள்ள கே.எஸ்.டி. அனந்த்ஜித் மக்கியா உறுப்பினராக இடம் பெற்றுள்ளார். அரசியல் பின்புலம் கொண்டவரை எப்படி பாடத்திட்டக் குழுவில் இடம்பெறலாம் என்றும், இந்த குழுவுக்கு அனுமதி அளித்தது யார் எனவும் கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், அவரை குழுவில் இருந்து நீக்கவும் கோரிக்கைகள் வலுத்துள்ளன.
அதேபோல், முந்தைய குழுத் தலைவர் சுல்தான் அகமது இஸ்மாயில் நீக்கப்பட்ட விவகாரமும் சர்ச்சையாகியுள்ளது. இதுகுறித்து பேராசிரியர் சுல்தானிடம் கேட்டபோது அவர் கூறியது: ஆட்சி மாற்றம் காரணமாக நான் பதவி விலகியதாக வெளியான தகவல் தவறானது. புதிதாக தயாரித்த சில பாடநூல்களின் பிரதியை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸிடம் சென்று வழங்கினேன். அந்தப் புகைப்படம் ட்விட்டரில் வெளியானதை வைத்து, நான் குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு (திமுக) நெருக்கமானவன் என்ற தவறான எண்ணம் உருவாகிவிட்டது.
ஜெயலலிதா, கருணாநிதி,ஸ்டாலின், பழனிசாமி என பலரின் ஆட்சியிலும் நான் பணியாற்றியுள்ளேன். எனக்கு எந்த அரசியல் சார்பும் இல்லை. புதிய தலைவராகப் பொறுப்பேற்ற மயில்சாமி அண்ணாதுரைக்கு வாழ்த்துகள். அதேநேரத்தில், நாங்கள் தொடங்கிய சிறந்த கல்விக் கொள்கைகளை அவர் தொடர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.