

புதுடெல்லி: பெட்ரோலில் 20 சதவீத எத்தனாலைக் கலக்கும் இ-20 திட்டம் இன்னும் ஒரு தொடர் பரிசோதனை முயற்சியாகவே உள்ளது என்றும், இதன் முழுமையான தாக்கம் அடுத்த ஆண்டுக்குள் தெளிவாகத் தெரியும் என்றும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. எத்தனால் கலப்பு அதிகரிப்பதால் பழைய வாகனங்களின் எஞ்சின்கள் பாதிக்கப்படலாம் மற்றும் மைலேஜ் குறையலாம் என்ற கவலைகள் எழுந்துள்ள சூழலில், மத்திய அரசின் இந்த அறிக்கை கவனம் பெற்றுள்ளது.
கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஒன்றை எதிர்த்து பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு சார்பாக ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி இந்த விளக்கத்தை அளித்தார். எத்தனால் விநியோக ஒப்பந்தங்கள் ஏற்கனவே கடந்த 2025 அக்டோபரிலேயே இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், தற்போது தனிப்பட்ட நிறுவனங்களின் ஒதுக்கீட்டை மாற்றியமைத்தால் அது தேசியக் கொள்கையையும், விநியோகச் சங்கிலியையும் பாதிக்கும் என்றும் அவர் வாதிட்டார். மேலும், 20 சதவீத எத்தனால் கலப்பு என்பது அரசின் கொள்கை முடிவு, அதில் மாற்றம் இருக்காது என்றும், நிறுவனங்களுக்கு வழங்கப்படும் எத்தனால் அளவு மட்டுமே தேவையைப் பொறுத்து மாறுபடும் என்றும் அவர் பின்னர் தெளிவுபடுத்தினார்.
இதற்கிடையில், எத்தனால் கலப்பால் வாகனங்களுக்கு இயந்திரக் கோளாறுகள் ஏற்படுவதாக எந்தவொரு உறுதியான ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ள மத்திய அரசு, இ-20 எரிபொருள் முற்றிலும் பாதுகாப்பானது மற்றும் நுகர்வோருக்கு உகந்தது, மேலும் 20% எத்தனால் கலப்பு முறையைச் சோதித்துப் பார்க்க அரசு முயற்சித்து வருகிறது. அதற்கான முடிவுகள் அடுத்த ஆண்டுக்குள் கிடைக்கும் என்று அண்மையில் விளக்கம் அளித்துள்ளது.
இத்திட்டத்தின் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைக்கப்பட்டு, இதுவரை ரூ.1.4 லட்சம் கோடிக்கும் அதிகமான அன்னியச் செலாவணி சேமிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டிலேயே, இலக்கிற்கு ஐந்து ஆண்டுகள் முன்னதாகவே இந்தியா 20 சதவீத எத்தனால் கலப்பு இலக்கை எட்டியுள்ள நிலையில், வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் இந்த அளவை 30 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.