

ஊட்டி அருகே உள்ள மார்லிமந்தில் தோடர் பழங்குடியினர் கோயில் கூரை வேய்து நார்ஸ்னர்ஸ் எனபடும் கும்பாபிஷேக திருவிழா நடத்தப்பட்டது.
ஊட்டி: ஊட்டி அருகே உள்ள தோடர் பழங்குடியின மக்களின் கோயிலில், நார்ஸ்னர்ஸ் எனப்படும் கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது. 30 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற இத்திருவிழாவில், 60-க்கும் மேற்பட்ட கிராமங்களை சார்ந்த நூற்றுக்கணக்கான தோடர் பழங்குடியின மக்கள் பங்கேற்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், இருளர், குறும்பர், காட்டு நாயக்கர், பணியர் ஆகிய ஆறு வகையான பண்டைய பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
இதில் தோடர் பழங்குடியின மக்கள் மந்து என்று அழைக்கப்படும் கிராமங்களில் வசித்து தனி கலாச்சாரத்தை கடைப்பிடித்து வாழ்ந்து வருகின்றனர். ஊட்டி அருகே உள்ள மார்லி மந்தில் 10-க்கும் மேற்பட்ட தோடர் பழங்குடியின குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் 1952ம் ஆண்டு பாரம்பரிய முறைப்படி புல், மூங்கில் மற்றும் பிரம்பு ஆகியவறை கொண்டு பிறை வடிவிலான கோயிலை உருவாக்கி வழிபட்டு வருகின்றனர். 74 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலின் கூரை மற்றும் நுழைவாயில் பகுதி 30 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்து வந்தது.
இக்கோயிலின் கூரை மற்றும் நுழைவுவாயில் பகுதியை மாற்ற தோடர் பழங்குடியினர் முடிவு செய்தனர். இதனையடுத்து ஆண்கள் அனைவரும் விரதம் மேற்கொண்டு அப்பர் பவானி மற்றும் கோரகுந்தா வன பகுதிகளுக்கு சென்று அவ்வுல் என்ற புற்கள், மூங்கில் மற்றும் பிரம்பு போன்ற பொருட்களை கொண்டு வந்து கடந்த இரண்டு மாதங்களாக புதுப்பிக்கும் பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
கோயிலின் கூரையை மாற்றி புதிய புற்கள் வேயப்பட்டு நுழைவுவாயில் பகுதி பழமை மாறாமல் வடிவமைக்கபட்டது. இப்பணிகள் நிறைவடைந்த நிலையில், நார்ஸ்னர்ஸ் எனபடும் கும்பாபிஷேக திருவிழா நேற்று முன்தினம் மாலை நடந்தது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 60-க்கும் மேற்பட்ட மந்துகளை சேர்ந்த தோடர் பழங்குடியின ஆண்கள் தங்களது பாரம்பரிய உடையுடன் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று, பாடல்களைப் பாடி, காணிக்கை செலுத்தி சிறப்பு வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து, தோடர் பழங்குடியின ஆண்கள் கோயில் முன் வட்டமாக நின்று, கைகளைக் கோர்த்தவாறு கலாச்சார நடனமாடினர்.