

சென்னை: தவெக அரசின் முதல் பொது பட்ஜெட்டுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பும் விமர்சனமும் தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி: தவெக அரசின் பட்ஜெட் மிகப்பெரிய பூஜ்ஜியமாக அமைந்திருக்கிறது. மாற்றம் மாற்றம் என்று கூறி கடந்த திமுக ஆட்சியில் செயல்படுத்திய அன்புச்சோலை, உலகம் உங்கள் கையில், கலைஞர் கனவு இல்லம், முதல்வர் படைப்பகங்கள் போன்ற திட்டங்களுக்கு மேல் அவர்களது கட்சி பெயரை ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர். மகளிர் உரிமைத் தொகையை உயர்த்தி வழங்குவது குறித்து ஒரு வார்த்தைகூட பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. கல்வித் துறைக்கான நிதியும் குறைக்கப்பட்டுள்ளது.
இதையெல்லாம் கேள்விகேட்டால் முதல்வருக்கு பதிலாக பொதுப்பணித் துறை அமைச்சரே இனி பதில் சொல்வார் என முன்ஜாமீன் வாங்குகிறார்கள். எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டியது இல்லை என்று தீர்மானமும் கொண்டு வருவார்களாம். பின் எதற்கு முதல்வர் அவைக்கு வரவேண்டும், நாங்கள் ஏன் அவைக்கு வர வேண்டும். இதுமாதிரியான நகைச்சுவையை எந்த மாநிலத்திலும் பார்க்க முடியாது.
தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்: தமிழகத்தின் வறுமையை ஒழித்து, 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவதற்கான தெளிவான திசையை தவெக அரசின் முதல் பட்ஜெட் காட்டுகிறது. திட்டங்கள் களத்தில் முழுமையாக செயல்படுத்தப்படுவதை எதிர்நோக்குவோம்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: தமிழகத்தின் கடன் சுமை கடந்த 5 ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்ந்திருந்தாலும் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
பாமக தலைவர் அன்புமணி: சேவை உரிமைச் சட்டம், நீர்ப்பாசன திட்டங்கள், செயற்கை நுண்ணறிவு நகரம், முதியோர் பொழுதுபோக்கு மையங்கள் போன்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அதேநேரம் சமூகநீதி சர்வேக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது, மின்வழித்தடம் அமைக்கும் திட்டத்தை தனியார் முதலீட்டில் செயல்படுத்துவது போன்றவற்றை ஏற்க முடியாது.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா: புதிய தொழிற்சாலைகள் அமைப்பது, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு,தமிழகத்தை நீர் மிகை மாநிலமாக மாற்றுவதற்கான தொலைநோக்கு திட்டங்கள் போன்ற அறிவிப்புகள் பட்ஜெட்டில் இல்லை.
மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: மக்கள் நல அம்சங்கள் குறித்த அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது. ஆனால் நவீன தாராளமய பாதையை ஒட்டிய திட்டங்கள் ஏற்கத்தக்கத்தல்ல. மகளிர் உரிமைத் தொகை,முதியோர் உதவித்தொகை போன்ற மக்கள் எதிர்பார்த்த தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்: வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, ஒப்பந்தப்பணியாளர்கள், தற்காலிக பணியாளர்களின் பணிநிரந்தரம், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2,500, பயிர்கடன் முழு தள்ளுபடி போன்ற மக்களின் எதிர்பார்ப்புகளை அரசு கருத்தில் கொள்ளவில்லை.
தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: எந்த தொலைநோக்கு திட்டமும் இல்லை. பல திட்டங்களுக்கு நிதிஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: ஆக்கப்பூர்வமான திட்டங்கள், பொருளாதார சீர்திருத்தத்திட்டங்கள் ஏதுவுமின்றி பெயரில் மட்டுமே வெற்றியை கொண்டுள்ள வெற்று பட்ஜெட்.
தமாகா தலைவர் ஜி.கே. வாசன்: ஏழை, எளிய, நடுத்தர மக்கள், பெண்கள், மாணவர்கள், முதியோர் என அனைத்து தரப்பினருக்குமான பட்ஜெட்டாக அமைந்தது வரவேற்கத்தக்கது.
ஐயூஎம்எல் தேசிய தலை வர் காதர் மொகிதீன்: தவெக பட்ஜெட்டில் காயிதே மில்லத் பெயரில் விருது, ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு மானியம், கிறிஸ்துவ, முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்களுக்கு நிதி ஒதுக்கீடு போன்ற பல முக்கிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது. எதிர்கால வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமிடும் இந்த பட்ஜெட்டை வழங்கிய முதல்வருக்கு நன்றி.
மேலும், எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், தவாக தலைவர் தி.வேல்முருகன், கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், வி.கே.சசிகலா, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வராசி.சுப்பிரமணியம், இந்திய தொழில்முனைவோர் சங்க தேசிய தலைவர் கே.இ.ரகுநாதன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா ஆகியோர் விமர்சித்துள்ளனர்.
மூத்த குடிமக்கள் நல சங்கங்கத் தலைவர் வீ.ராமராவ், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநிலத் தலைவர்சவுந்தரராஜன் ஆகியோர் பட்ஜெட்டை வரவேற்றுள்ளனர்.