எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிப்பு - முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு

எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிப்பு - முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு
Updated on
2 min read

மேட்டூர்: எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அங்கு திமுக வேட்பாளரின் வேட்புமனு ஏற்புக்கு அதிமுக, நாதக உள்ளிட்ட எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, திமுக வேட்பாளர் காசி, தவெக வேட்பாளர் அருண்குமார், நாதக வேட்பாளர் பிரியதர்ஷினி மற்றும் சுயேச்சைகள் உள்பட 36 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

வேட்புமனுக்கள் பரிசீலனை நாளான இன்று, எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான நடராஜன் முன்னிலையில் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன.

அப்போது, அதிமுக வேட்பாளர் பழனிசாமி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரியதர்ஷினி மற்றும் சுயேச்சை வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆனால், திமுக வேட்பாளர் காசியின் வேட்பு மனுவுடன் அவர் அளித்த பிரமாண பத்திரத்தில் இறுதி பக்கத்தில் உறுதிமொழி ஏற்பவரின் கையெழுத்தில் அவரது மனைவி கையெழுத்து போடப்பட்டிருந்ததாகவும், அவருக்கு மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த அவரது மனைவியின் பிரமாண பத்திரத்தில் உறுதிமொழி ஏற்பவர் என்ற இடத்தில் அவரது கணவரான காசியின் கையெழுத்து இருந்ததாகவும் புகார் எழுந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, நாதக, சுயேச்சை வேட்பாளர் மற்றும் நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து திமுக வேட்பாளரின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திமுக மேற்கு மாவட்ட செயலாளரும், சேலம் எம்பியுமான டி.எம்.செல்வகணபதி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில், தேர்தல் பிரிவு அதிகாரிகள் திமுக வேட்பாளரின் வேட்புமனுவை ஆய்வு செய்த நிலையில், உறுதிமொழி கையெழுத்தில் எவ்வித பிரச்சினையும் இல்லை என கூறி வேட்பாளரின் வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜன் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து திமுக வேட்பாளர் காசி மற்றும் சேலம் எம்பி டி.எம்.செல்வகணபதி அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

இதையடுத்து திமுக வேட்பாளரின் வேட்புமனு ஏற்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியர் அலுவலகத்தை அதிமுகவினர் 500-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட எஸ்பி கௌதம் கோயல் சம்பவ இடத்திற்கு வந்தார். அவரது தலைமையில் 4 டிஎஸ்பிக்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். மேலும், தேர்தல் பணிக்காக வந்திருந்த துணை ராணுவப் படையினர் 100க்கும் மேற்பட்டோரும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் குவிக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர், அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சியினரை அங்கிருந்த போலீஸார், துணை ராணுவத்தினர் அப்புறப்படுத்தினர்.

தவெக வேட்பாளர் வேட்புமனு நிராகரிப்பு: எடப்பாடி தொகுதியில் தவெக சார்பில் வேட்பாளர் அருண்குமார் மற்றும் மாற்று வேட்பாளராக அவரது மனைவி நித்யா ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் வேட்பாளரின் வேட்புமனுவை அதே தொகுதியைச் சேர்ந்த 10 பேர் முன்மொழிய வேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால், தவெக வேட்பாளர் அருண்குமாரின் மனுவில் 8 பேர் மட்டுமே முன்மொழிந்திருந்தனர். எனவே, தவெக வேட்பாளர் அருண்குமாரின் மனுவை தள்ளுபடி செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜன் உத்தரவிட்டார்.

இதே காரணத்திற்காக, தவெக மாற்று வேட்பாளர் நித்யாவின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. வேட்புமனு பரிசீலனையின் போது எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த தவெக வேட்பாளர் அருண்குமார், அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால், தவெக வேட்பாளரை கடத்தி சென்று விட்டதாக கூறி அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். பின்னர், பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் சமாதானப்படுத்தினர்.

திமுக மற்றும் அதிமுகவில் இருந்து விலகிய அருண்குமார், திடீரென தவெகவில் இணைந்து எடப்பாடி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், அவர் தனது வேட்புமனுவை வேண்டுமென்றே கவனக்குறைவாக தாக்கல் செய்துவிட்டதாக அக்கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டினர். அவரது மனு நிராகரிக்கப்பட்டதால், தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த எதிர்க்கட்சித் தலைவர் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில், தவெக போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிப்பு - முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு
“மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு அர்த்தம் இல்லாதது” - நயினார் நாகேந்திரன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in