

சாத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன்
சாத்தூர்: பாஜகவும் திமுகவும் ரகசிய கூட்டணி வைத்துள்ளதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அவரது குற்றச்சாட்டு அர்த்தம் இல்லாதது என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், செவ்வாய்க்கிழமை அன்று முக்கிய பிரமுகர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அதைத்தொடர்ந்து, கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையின்போது கலந்துகொண்டார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: நாளை முதல் பிரசாரத்தை துவங்க இருக்கிறேன். முதல்வர் ஸ்டாலின் வார்த்தை ஜாலங்களால் எப்போதுமே கருத்தை திரித்து சொல்லக்கூடியவர். சட்டப்பேரவைத் தொகுதியை கொடுத்தால் மத்திய அரசின் எந்த திட்டங்களானாலும் உங்களுக்கும் வந்து சேரும் என்ற பாணியில் தான் மகாராஷ்டிரா முதல்வர் மதுரையில் பேசினார்.
மெட்ரோ திட்டத்திற்கு விரிவான தகவல் திட்ட அறிக்கை கேட்டபோது தமிழக அரசு தவறான திட்ட அறிக்கையை கொடுத்தது. சரியான திட்ட அறிக்கையை கூட வழங்க முடியாத அரசாக தமிழக அரசு உள்ளது. கஞ்சா போதையில்தான் கவனத்தை செலுத்துகிறார்கள். நாட்டின் வளர்ச்சிக்காக கவனம் செலுத்துவதில்லை. போதைப்பொருள் விற்றவர்கள் எல்லோரும் தற்போது ரெட் ஜெயின்ட் மூவிஸ் மூலம் சினிமா தயாரித்து கொண்டு இருக்கிறார்கள்.
துபாய்க்கு ஓடியவர்கள் தற்போது ரெட் ஜெயின்ட் மூவி மூலம் சினிமா எடுக்கிறார்கள். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு திட்ட வரைவு போட முடியாத அளவுக்குத்தான் இந்த அரசு உள்ளது.
சாத்தூர் தொகுதியில் முழு கவனத்தை செலுத்தப் போகிறேன். வெடிமருந்து தொழிற்சாலைகளை பாதுகாக்க ஒற்றை சாளரை முறை வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கேட்டுள்ளார்கள். இங்கு நிறைய பொய் வழக்குகள் போடப்படுகின்றன. வெம்பக்கோட்டையில் தீக்காய சிகிச்சைப் பிரிவு வேண்டும் என மக்கள் கேட்டுள்ளார்கள். சாத்தூர் தொகுதி மக்களுக்காக நிச்சயம் இதையெல்லாம் நான் செய்து தருவேன். சுதந்திர இந்தியாவில் யார் எங்கு வேண்டுமானாலும் பிரச்சாரம் செய்யலாம். அதற்கான உரிமை எல்லோருக்கும் உள்ளது. எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான்.
மதிப்பிற்குரிய விஜய் கூட்டம் நடத்தும்போது சரியான முறையில் ஏற்பாடுகளை செய்யத் தெரியவில்லை. யார் வேட்பாளர், எந்த பகுதியில் கூட்டம் போடுகிறார்கள் என்பது கூட தெரியவில்லை. அவர்களிடத்தில் அது ஒரு பிரச்சினை.
திமுகவை பொறுத்தவரை அடக்குமுறை ஆட்சி. "ம் என்றால் வனவாசம், ஏன் என்றால் சிறைவாசம்" இதுதான் திமுகவின் அடக்குமுறை. ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொன்னால் அது உண்மையாகிவிடும் என முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறார். அது நடக்காது. இந்த தேர்தல் ஒரு குடும்ப ஆட்சிக்கு எதிரான போர்க்களம்.
ஒருமுறை 96 இடங்களைப் பெற்று திமுக மைனாரிட்டி ஆட்சி அமைந்தபோது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மைனாரிட்டி திமுக ஆட்சி என்று சொல்லி வந்தார். அதற்குப்பின் தமிழகத்தில் அது போன்ற மைனாரிட்டி ஆட்சி அமையவில்லை. தமிழகத்தில் இந்த முறை தொங்கு சட்டசபை ஏற்பட வாய்ப்பில்லை. பெரும்பான்மையான இடங்களில் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும் என்று கூறினார்.
பாஜகவும் திமுகவும் ரகசிய கூட்டணி வைத்துள்ளதாக மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், திமுகவும் தவெகவும் எங்களுக்கு எதிராக களத்தில் உள்ளது அனைவருக்கும் தெரியும். மம்தா பானர்ஜி அர்த்தமில்லாத குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அது உண்மையா என்பதை முதல்வர் ஸ்டாலினிடம் அவர் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று கூறினார்.