

கோப்புப் படம்
தாராபுரம்: தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்யபாமா வாக்குசேகரித்தபோது, பொதுமக்களில் சிலர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பிரச்சாரத்தை பாதியில் ரத்து செய்தார்.
தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமா, குண்டடம் ஒன்றியம், பெரிய குமாரபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று வாக்கு சேகரித்தார். பெரிய குமாரபாளையம் பகுதிக்குச் சென்றபோது, அங்கு திரண்டிருந்த பொதுமக்களில் சிலர் அவரது பிரச்சாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். “ரூ.50 கோடி பெற்றுக்கொண்டு கட்சி மாறிவிட்டீர்கள்; மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் இழைத்துவிட்டு இப்போது எப்படி ஓட்டு கேட்க வரலாம்?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து சத்யபாமாவுக்கும், அப்பகுதி பொதுமக்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியதால், அவர் பிரச்சாரத்தை பாதியிலேயே ரத்து செய்து விட்டு கிளம்பினார். ஏற்கெனவே வேட்புமனு தாக்கலின்போது அதிமுகவினர் அவரை எதிர்த்து கோஷமிட்டனர். இரு தினங்களுக்கு முன் பிஏபி விவசாயிகள் சத்யபாமாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.