

பாமக-வில் தந்தை, மகனுக்கு இடையே நிலவி வரும் பிரச்சினையால் கட்சியினர் இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர். கட்சியில் பெரும்பாலானவர்கள் அன்புமணி பக்கம் இருப்பதால் கட்சிக்குள் அன்புமணி கை ஓங்கி இருக்கிறது. இதைச் சாதகமாக பயன்படுத்தி முன்கூட்டியே அதிமுக கூட்டணியில் அன்புமணி இடம்பிடித்தார்.
இதனால், அந்தக் கூட்டணியில் ராமதாஸால் இணைய முடியாமல் போனது. இதையடுத்து, அடுத்த வாய்ப்பாக திமுக கூட்டணியில் இணைய ராமதாஸ் தீவிர முயற்சி மேற்கொண்டார். ஆனால் அங்கே. திருமாவளவன் முட்டுக்கட்டையாக இருப்பதால் அந்த வாய்ப்பும் ராமதாஸுக்கு கைநழுவிப் போனது.
இந்த நிலையில் கூட்டணி தொடர்பாக கட்சி நிர்வாகிகள், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களிடம் ராமதாஸ் கடந்த சில தினங்களாக தீவிர ஆலோசனை நடத்தினார். அப்போது, தவெக தலைவர் விஜய்க்கு இளைஞர்களின் ஆதரவு அதிகமாக உள்ளது. குறிப்பாக, விஜய்க்கு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறது. அதனால், விஜய்யுடன் கூட்டணி அமைக்கலாம். அதன் மூலம், ஒரே கல்லில் அன்புமணியையும், திமுக கூட்டணிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் திருமாவளவனையும் வீழ்த்த முடியும் என ஆதரவாளர்கள் ராமதாஸிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து, விஜய்யுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக ராமதாஸ் அடுத்த கட்ட ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். ஒரு தேசிய கட்சி உள்ளிட்ட சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் தவெக தரப்பு, ராமதாஸ் தரப்புடனும் கூட்டணி, இடங்கள், ஆட்சியில் பங்கு போன்றவை குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதுதொடர்பாக ராமதாஸ் தரப்பு பாமக நிர்வாகிகளிடம் கேட்ட போது, “பாமக, வன்னியர் சமூகம் என்றாலே அது ராமதாஸ் என்று அனைவருக்கும் தெரியும். குறிப்பாக, வன்னியர் சமூகத்தினர் ராமதாஸ் மீது பெரும் மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளனர். வடமாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கியை பாமக வைத்துள்ளது. வடமாவட்டங்களில் விஜய்க்கும் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.
மேலும், விஜய்க்கு இளைஞர்கள், பெண்களிடம் அதிக அளவில் ஆதரவு உள்ளது. ராமதாஸின் அரசியல் அனுபவமும், விஜய்யின் நட்சத்திர அந்தஸ்தும் ஒன்றாக சேரும்போது, மக்களின் ஆதரவும், தேர்தலில் வெற்றிவாய்ப்பும் பன்மடங்கு அதிகரிக்கும். இதையெல்லாம் மனதில் வைத்தே தவெக கூட்டணி குறித்து ராமதாஸ் பரிசீலனை செய்து வருகிறார்” என்றனர்.