

சென்னை: முதல்வர் விஜய் தலைமையில் தவெக தோழமைக் கட்சிகளின் கூட்டம் இன்று நடைபெற்றது. தவெக தலைமையிலான கூட்டணி உருவாக்கம் குறித்து முக்கிய முடிவுகள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
சென்னை கோவளத்தில் தவெக தோழமை கட்சிகளின் கூட்டம் இன்று நடைபெற்றது. தவெக தலைவரும், முதல்வருமான விஜய் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், மதிமுக உள்ளிட்ட தோழமை கட்சிகள் பங்கேற்றன.
காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர், விசிக தலைவர் திருமாவளவன், ஐயுஎம்எல் தலைவர் காதர் மொய்தீன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். மேலும், அக்கட்சிகளின் எம்எல்ஏக்கள் மற்றும் எம்.பி.க்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்தக் கூட்டத்தில் தவெக சார்பிலும், தோழமை கட்சிகளின் சார்பிலும் பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டன.
கூட்டத்துக்கு பின்னர் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “இந்தக் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்றது மகிழ்ச்சி. இது முதல் கட்ட பேச்சுவார்த்தை, அடுத்தடுத்த கட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.
தவெக தலைமையில் புதிய கூட்டணி அமைந்துவிட்டது. அனைவரும் இந்தக் கூட்டணி அமைந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். மதச்சார்பற்ற கொள்கையில் அமைந்துள்ள ஓர் இயற்கையான கூட்டணி இது என்று தோழமைக் கட்சிகள் தெரிவித்தன. எங்கள் கொள்கைகளுடன் ஒன்றிப்போகும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி சேர்வோம்” என்றார்.
தவெக தோழமைக் கட்சிகளின் கூட்டத்துக்குப் பின்னர் கூட்டாக தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய மாணிக்கம் தாகூர், “இது நல்ல தொடக்கம். தவெக தலைமையில் நடந்த தோழமைக் கட்சிகளின் கூட்டத்தில் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தினோம். இந்தக் கூட்டணிக்கு ஒருங்கிணைப்புக் குழு உருவாக்க வேண்டும், குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்க வேண்டும், கூட்டணிக்கான பெயர் ஆகிய 3 விஷயங்கள் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
தவெகவில் எம்.பிக்கள் வரும்போது இண்டியா கூட்டணியில் இணைவது குறித்து முடிவு செய்யப்படும்” என்றார்.
இந்தக் கூட்டத்தில் இடதுசாரி கட்சிகள் பங்கேற்கவில்லை. இருப்பினும், இன்று காலையில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் முதல்வர் விஜய்யை சந்தித்துப் பேசினர். அதன்பின்னர் அவர்கள், “தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றாலும், அரசுக்கான எங்கள் ஆதரவு தொடரும்” என்றனர்.