

தொகுதிப் பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தைக் குழுவை அமைத்து, வந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டதாக திமுக ஆதரவு தமிழக காங்கிரஸ் புள்ளிகள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், விஜய்யுடனான சந்திப்பின் மூலம் அந்த கொண்டாட்டத்தில் குண்டு வீசி இருக்கிறார் ராகுலுக்கு நெருக்கமான வராகச் சொல்லப்படும் பிரவீன் சக்கரவர்த்தி.
இதற்கு மத்தியில், ‘வேண்டாம் திமுக; வேண்டும் தவெக’ என உள்ளுக்குள் பேசி வரும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் ராகுலுக்கு சில கணக்குகளைப் போட்டு அனுப்பி இருப்பதாகச் சொல்கிறார்கள். ‘‘தவெக-வுடன் நாம் கூட்டணி வைக்கா விட்டால் அதிமுக அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி அமைந்தால் அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள்.
அதனால் திமுக கூட்டணியில் நமக்கு 50 இடங்களைக் கொடுத்தாலும் எந்த பிரயோஜனமும் இருக்காது. அதற்கு மாறாக, தவெக-வுடன் நாம் கூட்டணி வைத்தால் தமிழகத்தில் மட்டுமல்லாது... புதுச்சேரி, கேரளாவிலும் காங்கிரஸ் - தவெக கூட்டணி ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பிருக்கிறது.
ஏனென்றால், இந்த இரண்டு மாநிலங்களிலும் விஜய்க்கு கணிசமான செல்வாக்கு இருக்கிறது. அது காங்கிரஸ் ஆட்சியமைக்க கைகொடுக்கும்.
புதுச்சேரியில் உள்ள 30 இடங்களில் காங்கிரஸுக்கு 20 இடங்களும், தவெக-வுக்கு 10 இடங்களும் பங்கிட்டுக் கொள்ளலாம். வென்றால் காங்கிரஸுக்கு முதல்வர் பதவியும், தவெக-வுக்கு துணை முதல்வர் பதவியும் பேசிக் கொள்ளலாம்.
அதேபோல் கேரளாவில் உள்ள 140 தொகுதிகளில் 100 இடங்களில் காங்கிரஸும், 40 இடங்களில் தவெக-வும் போட்டியிடலாம். அங்கும் காங்கிரஸுக்கு முதல்வர் பதவியையும் தவெக-வுக்கு துணை முதல்வர் பதவியை யும் பங்கிட்டுக் கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் தவெக-வுக்கு 184 இடங்களும் காங்கிரஸுக்கு 50 இடங்களும் என ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்.” என ராகுலுக்கு தகவல் அனுப்பி இருக்கிறார்களாம் திமுக கூட்டணியில் இருந்தது போதும் என்று சொல்லும் தமிழக காங்கிரஸ்காரர்கள்.
இதன் மூலம், தென்னிந்தியாவில் ஏற்கெனவே கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி உள்ள நிலையில் கேரளம் மற்றும் புதுச்சேரியிலும் காங்கிரஸை ஆட்சியில் அமர்த்திவிடலாம். தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட காங்கிரஸ் ஆட்சி என்ற நிலை இருக்கும்.
இதன்மூலம் தென்மாநிலங்களை காங்கிரஸ் கோட்டையாக மாற்றி விடலாம் என்றும் டெல்லிக்கு யோசனை சொல்லி இருக்கிறார்களாம்.