

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்
திருச்சி: தவெகவின் 6 மாத கால ஆட்சி நம்பிக்கை தருவதாக இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.
திருச்சி திருவெறும்பூர் பெல் வளாகத்தில் செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறியது: “பெல் நிறுவனத்தில் ஆட்குறைப்பு செய்வதும், கான்ட்ராக்ட் முறை நீடிப்பதும் முறையல்ல. பல ஆயிரக்கணக்கானோருக்கு வாழ்வளிக்கும் பெல் தொழிற்சாலையை பாதுகாப்பதுடன், தொழிலாளர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும்.
தமிழகத்தில் காலியாக உள்ள 5 தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு குறித்து கட்சியின் மேலிட அமைப்பு கூடி முடிவெடுக்கும். எங்களுக்கு அரசியலில் பிரதான எதிரி ஆர்எஸ்எஸ்,பாஜகதான். அதை வீழ்த்துவதற்குதான் எங்கள் வியூகங்கள் இருக்கும்.
தவெகவின் 6 மாத கால ஆட்சி நம்பிக்கை தருவதாக இல்லை. மக்கள் அளித்த தீர்ப்பை மதித்தும், ஆளுநர் அதிகாரத்தில் அமர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவும்தான் நாங்கள் ஆதரவளித்தோம்.
13 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவகாரத்தில் ஒரு வார்த்தைகூட முதல்வர் கண்டிக்காமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. திரைப்படத்தில் ஒரு வாக்குக்காக போராடியவர், 13 கோடி பேரின் வாக்குகள் பறிக்கப்பட்டதை ஏன் கண்டிக்க மறுக்கிறார்?” என்று அவர் கூறினார்.