மயிலாடுதுறை துலா உற்சவத்துக்காக காவிரியில் நீர் திறக்கக் கோரிய வழக்கு முடித்துவைப்பு

மயிலாடுதுறை துலா உற்சவத்துக்காக காவிரியில் நீர் திறக்கக் கோரிய வழக்கு முடித்துவைப்பு
Updated on: 
1 min read

சென்னை: மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாத தீர்த்தவாரி நடைபெறும் நவம்பர் 16-ம் தேதிக்குள் காவிரி நீர் சென்றடையும் என அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், காவிரியில் தினமும் 500 கன அடி தண்ணீர் திறந்துவிடக் கோரிய பொதுநல வழக்கை முடித்து வைத்தனர்.

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் பக்தர்கள் புனித நீராடும் வகையில் காவிரியில் தினமும் 500 கனஅடி நீர் திறந்துவிட உத்தரவிடக் கோரி, மயிலாடுதுறையைச் சேர்ந்த வழக்கறிஞரும், பாஜக மாநில செயற்குழு உறுப்பினருமான ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அதில், ‘காவிரி துலாக்கட்டத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐப்பசி துலாக்கட்ட உற்சவத்தில் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். கடந்த 2023, 2024-ம் ஆண்டுகளில் முக்கிய தீர்த்தவாரி நாட்களில் போதிய தண்ணீர் இல்லாததால் பக்தர்கள் சிரமத்துக்குள்ளாகினர்.

நடப்பாண்டு ஐப்பசி துலா உற்சவம் நவம்பர் 6-ம் தேதி தொடங்கிய நிலையில், நவம்பர் 16-ம் தேதி நடைபெறவுள்ள கடைமுகத் தீர்த்தவாரியையொட்டி காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டும் துலாக்கட்டத்தில் போதிய நீர் இல்லை. இதனால் தருமபுரம் ஆதீனகர்த்தரே காவிரியில் நீராட முடியாமல், பாத்திரத்தில் கொண்டுவரப்பட்ட தண்ணீரில் மத ரீதியிலான தீர்த்தவாரி சடங்குகளைச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

எனவே, விழாக் காலங்களில் காவிரியில் உரிய அளவு தண்ணீர் திறந்துவிடவும், ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி விழாவுக்கு முன்னதாக நீர் மேலாண்மைத் திட்டத்தை வகுக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் நிரந்தரக் குழு அமைக்கவும் உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பரமணியம், ஆர்.ராஜேஷ் விவேகானந்தன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் மதுசூதனன், வெங்கடேசன் ஆகியோர், ‘துலாக்கட்டத்தில் நடைபெறவுள்ள தீர்த்தவாரியில் பக்தர்கள் புனித நீராடும் வகையில் காவிரி நீரைத் திறந்துவிட உத்தரவிட வேண்டும்’ எனக் கோரினார்.

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோஷன் ரித்திக், ‘ஏற்கெனவே காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 16-ம் தேதி நடைபெறவுள்ள தீர்த்தவாரி உற்சவத்தில் பக்தர்கள் புனித நீராடும் வகையில் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்துக்கு தண்ணீர் சென்றடையும்’ என உறுதியளித்தார். அதையேற்ற நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

மயிலாடுதுறை துலா உற்சவத்துக்காக காவிரியில் நீர் திறக்கக் கோரிய வழக்கு முடித்துவைப்பு
“பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்றால் முதல்வரை சந்திக்க அழைத்துச் செல்வேன்” - மாணவர்களிடம் அமைச்சர் வினோத் உறுதி

X