

‘தான் ஏற்ற கதாபாத்திரங்களுக்கு பெருமை சேர்த்தவர் செளகார் ஜானகி’ என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் குறிப்பில், “தமிழ்த் திரையுலகின் தனித்துவமிக்க பழம்பெரும் நடிகையும், திரைப்படத் துறையில் மட்டுமின்றி நாடகத் துறையிலும் கோலோச்சி, தனது முத்திரையைப் பதித்தவருமான பத்மஸ்ரீ சௌகார் ஜானகி இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல்வேறு மொழிகளில் தான் ஏற்ற கதாபாத்திரங்கள் அனைத்துக்கும் பெருமை சேர்த்த சௌகார் ஜானகியை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், ரசிகர்கள் மற்றும் சக திரையுலகினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.