“அதிமுக ஊழல் கட்சி எனில் செங்கோட்டையனை சேர்த்துக் கொண்டது ஏன்?” - விஜய்க்கு தினகரன் கேள்வி

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

Updated on
1 min read

மதுரை; ‘‘அதிமுகவை ஊழல் கட்சி என்று விஜய் சொல்கிறார். கடந்த 2021 வரை அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த செங்கோட்டையனை தவெகவில் எதற்காக அவர் சேர்ந்துகொண்டார்? எனவே, தவெகவின் நிலைப்பாடு என்ன என்பதே புரியவில்லை’’ என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “நானும் செங்கோட்யைனும் கடந்த 1986-ம் ஆண்டிலிருந்தே நண்பர்களாக பழகி வருகிறோம். அவர் தவெகவுக்கு போவதற்கு முன்பே என்னிடம் கூறிச் சென்றார். அந்த அடிப்படையில் தவெக கூட்டணிக்கு நான் வரவேண்டும் என அவர் விருப்பப்பட்டார். அவர் என்னை விட சீனியர் என்பதால், அவரது அழைப்பு மறுக்க முடியாமல் தயங்கி தயங்கி வரவில்லை என்று சொல்லாமல், பார்த்துக் கொள்வோம் என்றேன்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்கு முன் டெல்லிக்கு சென்று வந்த பிறகு செங்கோட்டையனிடம் பேசினேன். பாஜக முக்கிய தலைவர் உங்களை கேட்டார்கள் என்று அவர்கள் அழைத்த தகவலை கூறினேன். அதற்காக நீங்கள் வாருங்கள் என்று கூற முடியாது அல்லவா? ஆனால், அவரோ அது எனக்கு சரிவராதுங்க என்று கூறிவிட்டார். அவர் நான் தவெக கூட்டணிக்கு வருவேன் என்று உறுதியாக நம்பினார். நான் எனது சூழ்நிலை காரணமாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையவில்லை.

மேலும், நான் தேர்தலில் போட்டியிட கூடாது என்று சொன்னதாகவும் கூறுகிறார்கள். இன்று நினைத்தாலும் தேர்தலில் போட்டியிடுவேன். கட்சிக்காரர்கள் வலியுறுத்தினால் என் முடிவை மாற்றப்போகிறேன். முடிவெடுத்தால் போட்டியிட கூடாது என்பது சட்டமா? சமூக வலைதளத்திலும், மீடியாவிலும் அழுத்தம் இருந்ததாக பரபரப்புக்கு செய்தி போடுகிறீர்கள். என்னிடம் யாரும் அழுத்தமும் கொடுக்க முடியாது. உத்தரவிடவும் முடியாது.

அரசியல் என்பது சதி நிறைந்த துறை. தேவையில்லாத சகுனிகள் இருப்பார்கள். அதையும் தாண்டி ஆரோக்கியமான நட்பு இருக்க வேண்டும். ஒரு ஆரோக்கியமான ஆட்சி அமையவேண்டும், ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும் என்பதால் நான் இணைந்தேன். பழனிசாமியும், நான் இந்தக் கூட்டணிக்கு வர வேண்டும் என்று விருப்பப்பட்டார்.

அதிமுகவை ஊழல் கட்சி என்று விஜய் சொல்கிறார். கடந்த 2021 வரை அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த செங்கோட்டையனை தவெகவில் எதற்காக அவர் சேர்ந்துகொண்டுள்ளார்? எனவே, தவெகவின் நிலைப்பாடு என்ன என்பதே புரியவில்லை. வரும் தேர்தலில் என்டிஏவுக்கும், திமுக கூட்டணிக்கும் தான் போட்டியாக இருக்கும்” என்று தினகரன் தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>டிடிவி தினகரன்</p></div>
கொட்டு ராஜா என்கவுன்டர்: காயமடைந்த உதவி ஆய்வாளருக்கு எஸ்பி அனிதா நேரில் ஆறுதல்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in