கொட்டு ராஜா என்கவுன்டர்: காயமடைந்த உதவி ஆய்வாளருக்கு எஸ்பி அனிதா நேரில் ஆறுதல்!

கொட்டு ராஜா என்கவுன்டர்: காயமடைந்த உதவி ஆய்வாளருக்கு எஸ்பி அனிதா நேரில் ஆறுதல்!
Updated on
2 min read

மதுரை: அழகு ராஜா என்கிற ரவுடி கொட்டு ராஜா என்கவுன்டர் விவகாரம் தொடர்பாக பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், காவல் உதவி ஆய்வாளர் சங்கரை நேரில் சென்று எஸ்பி ஜி.எஸ்.அனிதா நலம் விசாரித்தார்.

மதுரை காமராஜபுரம் முத்துராமலிங்க தேவர் தெருவை சேர்ந்த சண்முகவேல் மகன் காளிமுத்து என்ற வெள்ளைக் காளி (40). இவர் மீது மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கடந்த 22 ஆண்டுகளில் 8 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி, கஞ்சா கடத்தல் உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன. சென்னையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வெள்ளைக்காளியை கடந்த 23-ம் தேதி திண்டுக்கல்லில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

பின்னர் கடந்த 24-ம் தேதி சென்னை புழல் சிறைக்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு போலீஸ் எல்லைக்குட்பட்ட எறையூர் பகுதியில் போலீஸார் மற்றும் வெள்ளைக்காளி ஆகியோர் சாப்பிடுவதற்காக தனியார் ஓட்டலுக்கு சென்றனர். அப்போது போலீஸ் வானத்தை பின்தொடர்ந்து வந்த 15 பேர் கும்பல், வெள்ளைக்காளி மீது நாட்டு வெடி குண்டு வீசி கொல்ல முயன்றனர். இதில் வெள்ளைக்காளி காயமின்றி உயிர் தப்பினார்.

ஆனால் சென்னை புதுப்பேட்டையை சேர்ந்த ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் (54), தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த வினேஷ் குமார் (37), மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த மருதுபாண்டி (30) ஆகிய 3 போலீஸார் படுகாயம் அடைந்தனர். இருப்பினும் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் துப்பாக்கியால் கும்பலை நோக்கி சுட்டார். ஆனால் அவர்கள் போலீஸாரின் துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பியோடிவிட்டனர்.

இதுகுறித்து மங்களமேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். எஸ்பி ஜி.எஸ்.அனிதா தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் மதுரை, திண்டுக்கல், தேனி, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய இடங்களில் நாட்டு வெடி குண்டு வீசிய கும்பலை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை தேனியில் சிலர் தலைமறைவாக இருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற தனிப்படை போலீஸார், 6 பேரை கைது செய்து பெரம்பலூர் அழைத்து வந்தனர்.

அவர்களில் மதுரை ரவுடி அழகுராஜா என்ற கொட்டு ராஜா இருப்பது தெரியவந்தது. இவர் மீது மதுரையில் 3 கொலை உள்பட 7 வழக்குகள் பதிவாகி உள்ளன. ரவுடி வெள்ளைக்காளியின் தாய்மாமா ராஜபாண்டியின் மகன்கள் 2 பேரை அழகுராஜா கொலை செய்தார். இதற்கு பழி தீர்க்க வெள்ளைக்காளி, அழகுராஜாவின் தாய்மாமா வி.கே.குருசாமி, அவரது மகன் வி.கே.எஸ்.மணி ஆகியோர் கொலை செய்ய முயன்று வருகிறார்.

இருக்குடும்பத்தின் முன்விரோதம் காரணமாக, அழகுராஜா, வெள்ளைக்காளியை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. இதற்கிடையில் நேற்று அதிகாலை மங்களமேடு, போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் அழகுராஜா பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை போலீஸார் பறிமுதல் செய்ய அவரை அழைத்து சென்றனர்.

அப்போது போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடி குண்டு வீசிவிட்டு, அழகுராஜா தப்பி செல்ல முயன்றார். இதை தடுக்க குன்னம் காவல் உதவி ஆய்வாளர் சங்கர் முயன்றபோது, அவரை அரிவாளால் வெட்டிவிட்டு அழகுராஜா தப்பி செல்ல முயன்றார். அப்போது போலீஸார், அழகுராஜாவை துப்பாக்கியால் சுட்டு பிடிக்க முயன்றனர். இதில் அவரது தலையில் குண்டடிப்பட்டத்தில் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். அழகுராஜா தாக்கியதில் படுகாயம் அடைந்த சங்கர் பெரம்பலூர் அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், காவல் உதவி ஆய்வாளர் சங்கரை நேரில் சந்தித்து எஸ்பி ஜி.எஸ்.அனிதா நலம் விசாரித்தார்.

கொட்டு ராஜா என்கவுன்டர்: காயமடைந்த உதவி ஆய்வாளருக்கு எஸ்பி அனிதா நேரில் ஆறுதல்!
பெரம்பலூரில் போலீஸ் என்கவுன்ட்டர் - ரவுடி கொட்டு ராஜா உயிரிழப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in