தே.ஜ. கூட்டணியில் இணைந்தார் டிடிவி தினகரன்

தே.ஜ. கூட்டணியில் இணைந்தார் டிடிவி தினகரன்

Published on

தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணிக் கணக்குகளும், தொகுதிப் பங்கீடுகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணியைப் பொறுத்தவரை அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தமாகா, புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே கைகோர்த்துள்ளன.

இதற்கிடையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நாளை (23-ம் தேதி) மதுராந்தகத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இதனை முன்னிட்டு அனைத்துக் கூட்டணி தலைவர்களையும் ஒரே மேடையில் ஒன்றிணைத்து, பலத்தை நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கில் கூட்டணியை இறுதிப்படுத்தும் பணிகள் திவீரமாக நடைபெற்று வருகின்றன.

அந்தவகையில், கூட்டணி விவகாரங்களை இறுதி செய்ய பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் இரண்டாவது முறையாக நேற்று முன் தினம் இரவு சென்னை வருகை தந்தார். அன்றிரவு பாஜக மூத்த தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். தொடர்ந்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் வானதி சீனிவாசன் உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் நேற்று காலை முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.

மறுபுறம், சென்னை அடையாறில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய டிடிவி தினகரன், தமிழகத்தில் மீண்டும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களது இலக்கு. அதற்காகவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறோம், என்று அதிரடியாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, காலை 11 மணியளவில் பியூஷ் கோயலை சந்தித்த டிடிவி தினகரன், தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.

பியூஷ் கோயல் அவருக்கு பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றார். இந்தச் சந்திப்பின் போது தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினர். பின்னர், பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தேசிய ஜனநாயக கூட்டணியில் பழனிசாமி, அன்புமணி, ஜி.கே.வாசன் ஆகியோருடன் தினகரனும் இணைந்திருப்பது, ஊழல் மலிந்த திமுக ஆட்சியை வீழ்த்தும் எங்களது இலக்கை உறுதிப்படுத்தியுள்ளது. திமுக அரசு தமிழக மக்களையும், தமிழ் கலாச்சாரத்துக்கும், தமிழர்களின் பெருமைக்கும் எதிராக செயல்பட்டு வருகிறது. இது நம் அனைவரையும் மிகுந்த வருத்தத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

நாம் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து செயல்பட்டு, இந்திய விரோத திமுக கூட்டணியைத் தோற்கடிப்போம். ஸ்டாலின், உதயநிதி மற்றும் சபரீசன் ஆகியோரின் ஊழல்களைத் தமிழக மக்கள் முன்னிலையில் அம்பலப்படுத்துவோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்துக்கு ஒரு சிறந்த தலைமையையும், நல்லாட்சியையும் வழங்கும்.

அந்த வகையில், டிடிவி.தினகரன் மீண்டும் இக்கூட்டணியில் இணைந்திருப்பது, தமிழக மக்களுக்கு ஒரு ஒளிமயமான மற்றும் மகத்தான எதிர்காலத்தை உருவாக்கித் தர வேண்டும் என்ற எங்களது உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தந்த பெருமையை மீண்டும் நிலைநாட்டுவோம். ஜெயலலிதாவின் தலைமையையும், தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக அவர் மாற்றிய விதத்தையும் நினைக்கும் போது நான் நெகிழ்ச்சி அடைகிறேன். ஜெயலலிதாவின் உயர்ந்த லட்சியங்களைப் பின்பற்றி, அவர் தமிழகத்துக்கு வழங்கிய அதே நல்லாட்சியை மீண்டும் கொண்டு வருவதற்கு நாங்கள் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஓபிஎஸ் மகன் வருகையால் பரபரப்பு: பியூஷ் கோயலை சந்தித்துவிட்டு டிடிவி தினகரன் கிளம்பிய சில நிமிடங்களிலேயே, அதிமுகவின் முக்கியத் தலைவர்களான துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் அதே ஓட்டலுக்கு வந்து பியூஷ் கோயலைச் சந்தித்தனர். தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து அவர்கள் ஆலோசித்ததாகத் தெரிகிறது.

அதிமுக தலைவர்கள் புறப்பட்ட சிறிது நேரத்தில், ஓபிஎஸ்-ன் மகனும் முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத் அதே ஓட்டலில் இருந்து வெளியே வந்தார். ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் அண்மைக் காலமாக மாற்றுப் பாதையைத் தேடி வரும் சூழலில், ரவீந்திரநாத்தின் இந்த வருகை அரசியல் வட்டாரத்தில் பல யூகங்களைக் கிளப்பியது. அப்போது, செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ரவீந்திரநாத், “நான் தனிப்பட்ட காரணங்களுக்காகவே இங்கு வந்தேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து விரைவாகப் புறப்பட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தே.ஜ. கூட்டணியில் இணைந்தார் டிடிவி தினகரன்
திமுக ஆட்சிக்கு இந்தியா முழுவதும் வரவேற்பு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in