Published : 05 Sep 2023 04:02 AM
Last Updated : 05 Sep 2023 04:02 AM
தூத்துக்குடி: தமிழகத்தில் நடைபெறும் சிறப்பான ஆட்சிக்கு இந்தியா முழுவதும் வரவேற்பு கிடைத்துள்ளது என, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தூத்துக்குடி வடக்கு, தெற்கு ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற் கிழி வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் நடைபெற்றது. திமுக வடக்கு மாவட்டச் செயலாளரான அமைச்சர் பெ.கீதா ஜீவன், தெற்கு மாவட்டச் செயலாளரான அமைச்சர் அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். மேயர் ஜெகன் பெரியசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம்.சி.சண்முகையா, ஜீ.வி.மார்க்கண்டேயன் முன்னிலை வகித்தனர்.
தமிழக இளைஞர் நலன்மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற் கிழி மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்க தொகை வழங்கி பேசியதாவது: தமிழகத்தில் நடைபெறும் சிறப்பான ஆட்சி இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் மாநாட்டில் நான் சனாதன கோட்பாடுகளை ஒழிக்க வேண்டும் என்று தான் பேசினேன். ஆனால் பாஜகவினர் அதனை திரித்து வெளியிட்டு வருகின்றனர். அமித் ஷா, நட்டா என அனைவரும் இதையேபேசி வருகின்றனர். உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒரு சாமியார் எனது தலைக்கு விலை வைத்துள்ளார்.
எனது தலையை சீவ 10 கோடி எதற்கு, 10 ரூபாய் சீப்பு இருந்தால் போதுமே. மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கும் இது போல மிரட்டல் விடுத்தனர். இந்த மிரட்டல்களுக்கு நான் பயப்பட மாட்டேன். நான் மன்னிப்பு கேட்க வேண்டுமாம். நான் கருணாநிதியின் பேரன், மன்னிப்பு கேட்க மாட்டேன். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
தொடர்ந்து சூசை பாண்டியாபுரத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT