

தமிழகத்தில் அடுத்து அமையவுள்ள கூட்டணி அமைச்சரவையில் அமமுக பங்கு பெறுவதற்கான பிரகாசமான அறிகுறிகள் தென்படுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.
நேற்று கோவை மேட்டுப்பாளையத்தில் நடந்த அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றபின், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது: தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக கூட்டம் நடத்தி வருகிறேன். கட்சி கட்டமைப்பு வலுவாக உள்ள தொகுதிகளை கூட்டணியில் பெற்று போட்டியிட முடிவு செய்துள்ளோம். டிசம்பர் 10-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்களைப் பெறவுள்ளோம். சட்டசபைத் தேர்தலில், அமமுக-வைத் தவிர்த்து விட்டு, எந்த கூட்டணியும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை உருவாகி உள்ளது.
கூட்டணிக்காக நாங்கள் நிபந்தனை வைக்க மாட்டோம். நட்பு ரீதியாக, எங்களுக்கு மரியாதை கொடுக்கின்ற கூட்டணியில், நாங்கள் இடம்பெறுவோம். நாங்கள் இடம்பெறும் கூட்டணி தான் வெற்றிக் கூட்டணியாக, ஆட்சி அமைக்கும் கூட்டணியாக இருக்கும். சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று அமமுக-வைச் சேர்ந்தவர்கள் உறுதியாக சட்டமன்றம் செல்வார்கள். தேர்தலுக்குப்பின் அமையும், கூட்டணி அமைச்சரவையில் பங்கு பெறும் பிரகாசமான அறிகுறிகள் தென்படுகின்றன.
அண்ணாமலை எனது நண்பர். நாங்கள் நட்புரீதியாக சந்திக்கிறோம். அதைத்தாண்டி அரசியல் கணக்குகளை தொடர்புபடுத்தினால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. அமைச்சர் நேரு மீதான, அமலாக்கத்துறை வைத்துள்ள ஊழல் குற்றச்சாட்டின் மீது, தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்திருந்து பார்ப்போம்.
பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக, மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற, யார் காரணம் என்பது உங்களுக்குத் தெரியும். எதிர்கட்சிகள் கூட்டணியில் தவறு செய்வார்கள் என்று திமுக காத்திருக்கிறது. அதன் அடிப்படையில் தான் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று அறைகூவல் விடுக்கின்றனர்.
தனக்கு பதவி இருக்க வேண்டும், கட்சி தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற சுயநலத்தோடு சிலர் இருப்பதால்தான், இந்தத் தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்று திமுக நம்புகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.