

தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற அமமுக பொதுக்குழு - செயற்குழு கூட்டத்தில்...
“தேர்தல் நேரத்தில் யார் எதிரி, யார் துரோகி என்றெல்லாம் என் கண்களுக்குத் தெரியாது. எந்த ஆட்சி அமைந்தால் தமிழகத்துக்கு நல்லதோ, அதைச் செய்வேன்” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் அமமுக-வின் பொதுக்குழு - செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தஞ்சாவூர் மாநகரச் செயலாளர் ராஜேஸ்வரன் வரவேற்றார். துணைப் பொதுச் செயலாளர் எம்.ரங்கசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் டிடிவி.தினகரன் பேசியது: தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. அது தொடர வேண்டும். அமமுக இடம்பெறும் கூட்டணி தான், தமிழகத்தில் வெற்றிக் கூட்டணியாக, ஆட்சி அமைக்கின்ற கூட்டணியாக இருக்கும்.
இந்த தேர்தலில் நாம் கை காட்டுபவர் தான் தமிழகத்தின் முதல்வராக வர முடியும். அதற்காக நான் யாரிடமும் சமரசம் செய்து கொள்ளவில்லை. கட்சியினர் எதிர்பார்க்கும் அளவுக்கு, கூட்டணியில் சீட்டுகளை பெற்று, உறுதியாக அதில் 80 சதவீதத்துக்கு மேல் வெற்றி பெறுவோம். தேர்தல் நேரத்தில் யார் எதிரி, யார் துரோகி என்றெல்லாம் என் கண்களுக்குத் தெரியாது. எந்த ஆட்சி அமைந்தால் தமிழகத்துக்கு நல்லதோ, அதைச் செய்வேன். அதற்காக என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு அதிகாரத்தை கொடுத்து இருக்கிறீர்கள். உறுதியாக அமமுக கவுரவமான இடங்களைப் பெற்று, கூட்டணி ஆட்சி அமைக்கும். அதில் அமமுக-வினரும் அமைச்சர்களாக இடம் பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக இந்தக் கூட்டத்தில், ‘வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மூலம், வரும் சட்டப் பேரவைத் தேர்தல் நியாயமானதாகவும், நேர்மையானதாகவும் நடைபெறுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். தமிழகத்துக்கென தனியாக சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக ஆட்சியில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் மற்றும் உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் குறித்து விரிவான அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்’ என்பன உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.