

“அமித் ஷா வருகையால் இண்டியா கூட்டணி பலமடையும் என காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கூறி உள்ளார். ஏன், அவர் மீதே அவருக்கு நம்பிக்கை இல்லையா?” என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.
திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “திருச்சியில் மத்திய அமைச்சர் அமித் ஷா வைத்துள்ள பொங்கல், தமிழகத்தில் நிச்சயமாக வெற்றிப் பொங்கலாக அமையும். வரும் தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தான் ஆட்சி அமைக்கும்.
அமித் ஷா வருகையால் இண்டியா கூட்டணி பலமடையும் என செல்வப்பெருந்தகை கூறி உள்ளார். ஏன், அவர் மீதே அவருக்கு நம்பிக்கை இல்லையா? அமித் ஷா வந்து தான் இண்டியா கூட்டணியை பலப்படுத்த வேண்டுமா? அமித் ஷா வருகையால் இண்டியா கூட்டணி பலவீனம் அடையும் என்பதை அவர் மறைத்துச் சொல்கிறார். எங்கள் கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வருவார்கள்” என்றார்.
பின்னர், அதிகமான தொகுதிகளை பாஜக கேட்பதால் தான் பழனிசாமி, அமித் ஷாவை சந்திக்கவில்லை எனக் கூறப்படுகிறதே? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “திருச்சியில் நடப்பது பொங்கல் விழா தான், பொலிட்டிக்கல் விழா அல்ல” என்றார்.