

சென்னை: பழனி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் விடுதிகளின் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதை இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமுக தலைதள பதிவில், ”தமிழகத்தின் முக்கிய ஆன்மீகத் தலங்களில் ஒன்றாகத் திகழும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள விடுதிகளின் கட்டணம் 600 ரூபாய் முதல் 2,500 ரூபாய் வரை உயர்த்தப்பட்டிருப்பதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.
தொலைதூரங்களில் இருந்து பழனி முருகனை தரிசிக்க வரும் ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினர் குறைந்த செலவிலும், பாதுகாப்பாக தங்குவதற்காகவும், கோயில் நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்ட விடுதிகளின் கட்டணத்தை தனியார் விடுதிகளுக்கு இணையாக திடீரென பெருமளவு உயர்த்தப்பட்டிருப்பது அவ்விடுதிகள் கட்டப்பட்ட அடிப்படை நோக்கத்தை அடியோடு சிதைக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
எனவே, பழனி கோயிலுக்கு வரும் பக்தர்களை வருவாய் ஈட்டும் கருவியாக பார்க்கும் இத்தகைய விடுதிக் கட்டணங்களின் உயர்வை உடனடியாக திரும்பப்பெறுவதோடு, பக்தர்களுக்கு சிரமத்தை உண்டாக்கும் எத்தகைய முடிவுகளையும் இதுபோன்று அவசர கதியில் எடுக்கக் கூடாது என இந்து சமய அறநிலையத் துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.