மன்னார்குடி அமமுக எம்எல்ஏ கடத்தல்? - குதிரைபேரம் நடப்பதாக ஆளுநரிடம் டிடிவி தினகரன் புகார்

மன்னார்குடி அமமுக எம்எல்ஏ கடத்தல்? - குதிரைபேரம் நடப்பதாக ஆளுநரிடம் டிடிவி தினகரன் புகார்
Updated on
2 min read

சென்னை: அமமுக எம்எல்ஏ கடத்தப்பட் டதாக ஆளுநர் ஆர்.வி.அர் லேகரிடம் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் புகார் அளித்துள்ளார்.

தவெக ஆட்சியமைக்க 107 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ள நிலையில் 12 எம்எல்ஏக்கள் பற்றாக்குறை நிலவி வந்தது. இந்த சூழலில், திமுக கூட்டணி கட்சிகளிடம் விஜய் ஆதரவு கோரினார். காங்கிரஸ் சார்பில் ஏற்கெனவே 5 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்திருந்த நிலையில், நேற்று இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளின் எம்எல்ஏக்கள் 4 பேரின் ஆதரவும் அளிக்கப்பட்டது.

இதன் மூலம் தவெகவுக்கான எம்எல்ஏக்கள் ஆதரவு 116 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் ஒரு எம்எல்ஏ இருந்தால், ஆட்சியமைக்க ஆளுநரிடம் கோரலாம் என தவெகவினர் எதிர்பார்த்திருந்தனர்.

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் அமமுக சார்பில் 11 இடங்களில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். அதில் மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்ட எஸ்.காமராஜ் ஒருவர் மட்டும் வெற்றி பெற்றார். இவரது ஆதரவு கடிதத்தையும் சேர்த்து ஆளுநரிடம் விஜய் அளித்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு ஆளுநர் மாளிகைக்கு வந்த டிடிவி தினகரன், தனது கட்சி எம்எல்ஏவை காணவில்லை. அவர் பெயரில் மோசடியாக தவெக சார்பில் ஆதரவு கடிதம் வழங்கப்பட்டுள்ளது என புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தினகரன் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: இன்று (வெள்ளி) மாலை 6.30 மணி வரை காமராஜ் எங்களுடன் இருந்தார். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை ஆட்சியமைக்க அழைக்குமாறு கடிதம் தயார் செய்து, அதில் நானும், காமராஜும் கையெழுத்திட்டோம். இந்த கடிதத்தை இப்போது ஆளுநரிடம் கொடுத்திருக்கிறேன். இதில் கையெழுத்து பெற்ற பிறகு, காமராஜை காணவில்லை.

அவரை கைபேசியில் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. அவர் கடத்தப்பட்டிருக்கலாம். காமராஜ் கையெழுத்திட்டு ஆதரவு கடிதம் தவெகவினரிடம் வழங்க வாய்ப்பே இல்லை. விஜய், போலியாக கையெழுத்திட்டு ஆளுநரிடம் வழங்கி இருக்க வேண்டும். இது தொடர்பாக ஆளுநரிடம் புகார் தெரிவித்திருக்கிறேன்.

தூய சக்தி, தூய ஆட்சி கொடுக்கிறேன் என்று கூறிய விஜய். எங்கள் எம்எல்ஏவை விலைகொடுத்து வாங்கி இருக்கிறார். ஆட்சி அமைப்பதில் இப்படி ஊழல் செய்யும் விஜய் எப்படி நல்லாட்சி தர முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சூழலில் நள்ளிரவு 12 மணி அளவில் அமமுக எம்எல்ஏ காமராஜ், ஆளுநர் மாளிகைக்கு வந்தார். தொடர்ந்து டிடிவி தினகரனும் அங்கு வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறியதாவது: வாட்ஸ்அப்பில் காமராஜ் ஆதரவு தெரிவித்துள்ளதாக சொல்லி போலி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கும் எங்கள் கட்சிக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. அந்த கடிதத்தை தவெக தரப்பினர் ஆளுநரிடம் கொடுத்துள்ளனர். ஆட்சி அமைக்கவே இப்படி மோசடி செய்தால், ஆட்சி அமைத்தால் தமிழகம் என்னவாகும்? இது தொடர்பாக போலீஸில் புகார் அளிக்க உள்ளோம் என்றார்.

மன்னார்குடி அமமுக எம்எல்ஏ கடத்தல்? - குதிரைபேரம் நடப்பதாக ஆளுநரிடம் டிடிவி தினகரன் புகார்
2 கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரவுக் கடிதங்கள் வழங்கியதை தொடர்ந்து ஆளுநரை 3-வது முறையாக சந்தித்தார் விஜய்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in