

டிடிவி தினகரன்
திருச்சி: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: அதிமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள், கட்சிக்கும் தொகுதி மக்களுக்கும் துரோகம் செய்துவிட்டு சென்றுள்ளனர். எனவே, இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற அமமுக பணியாற்றும். மேலும், இடைத்தேர்தலில் தவெகவுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் கலந்தாலோசித்து இறுதி முடிவு எடுக்க வேண்டும்.
நெருக்கடி உள்ள பட்டினப்பாக்கத்தில் சட்டப்பேரவை கட்டிடம் கட்டும் திட்டம் அப்பகுதி மக்களுக்கு இடையூறாக இருக்கும். தனது வீட்டுக்கு அருகில் இருப்பதால் முதல்வர் பட்டினப்பாக்கத்தில் கட்டுகிறாரா? துக்ளக் ஸ்டைலில் இந்த ஆட்சி செல்கிறது. தவெகவுக்கு வலியச் சென்று ஆதரவளித்த காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சியினர் விரைவில் வருத்தப்படுவார்கள்.
இந்திரா காந்தி கொண்டு வந்த மிசா, தவறான நடவடிக்கை என இந்தியா முழுவதும் தெரியும். அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.
காவல் துறை மோசமாக நடந்து கொண்டது. அதை பழித்துக்காட்டும் விதமாக முதல்வர் விஜய்யின் செயல்பாடு உள்ளது. சினிமாவில்தான் அவர் ஹீரோ. உண்மையான வாழ்க்கையில் அவர் வில்லன். குருட்டு அதிர்ஷ்டத்தில் ஆட்சிக்கு வந்துள்ளார். எப்படி ஆட்சி நடத்த வேண்டும் என தெரியவில்லை. திட்டங்கள் தீட்ட போதிய அறிவும் இல்லை. இடைத்தேர்தலில் மக்கள் அவருக்கு உரிய பாடம் புகட்டுவர் என்றார்.