

டிடிவி.தினகரன் | கோப்புப் படம்
தஞ்சாவூரில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் ஆகியோர் ஒரே வாகனத்தில் நின்று பிரச்சாரம் செய்தனர்.
அப்போது, டிடிவி.தினகரன் பேசியது: இன்றைக்கு நாங்கள் 2 பேரும், ஒரே வேனில் ஒன்றாக நின்று பிரச்சாரம் செய்வதைப் பார்த்து சிலர் பயத்தின் உச்சத்தில் உள்ளனர். தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சியை, பழனிசாமி தலைமையில் உருவாக்க தேசிய ஜனநாயக கூட்டணியாக இணைந்துள்ளோம்.
டெல்டாவை திமுகவின் கோட்டை என்கின்றனர். இது, ஜெயலலிதாவின் கோட்டையாக இருந்தது. இடையில் நாங்கள் கோட்டை விட்டுவிட்டோம். இப்போது இதை ஜெயலலிதாவின் கோட்டை என்பதை நீங்கள் உறுதியாக நிரூபிக்க வேண்டும். காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கான தீர்ப்பைப் பெற ஜெயலலிதா எப்படி சட்டப் போராட்டம் நடத்தினாரோ, அதேபோல டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக பாதுகாத்தவர் பழனிசாமி.
அவரது நான்காண்டு ஆட்சியில் பல சாதனைகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இன்றைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் தங்களை டெல்டாக்காரர்கள் எனக் கூறுகின்றனர். ஆனால், அவர்கள் உல்டாக்காரர்கள். இவ்வாறு அவர் பேசினார்.