

அண்ணாமலை
தமிழகத்தில் திமுக இனி ஜென்மத்துக்கும் ஆட்சிக்கு வராது என, பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கோவையில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் வேட்பு மனு தாக்கல் செய்ததில் இருந்து, வெயிலில் அதிகமாக பிரச்சாரம் செய்தார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு வானதி சீனிவாசன் வேலை செய்வதற்கு, இரண்டு நாட்கள் மக்கள் ஓய்வு கொடுத்துள்ளனர். மீண்டும் களத்துக்கு வந்து வேகமாக, வீரியமாக வேலை செய்வார்.
நான் தேர்தலுக்குப் பின்பு ஜனநாயகன் திரைப்படத்தை, ஒரு ரசிகனாக திரையரங்குக்கு சென்று பார்ப்பேன். சினிமாவையும், அரசியலையும் குழப்பக்கூடாது. ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகனின் பெயரை உள்ளே இழுப்பது அரசியல் அநாகரிகம். அரசியல் ஆதாயத்துக்காக பாஜக பெயரை இழுக்க வேண்டாம்.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட 471 நாள் புழல் சிறையில் இருந்து விட்டு செந்தில் பாலாஜி வந்துள்ளார். திமுக வேண்டாம். தேசிய ஜனநாயகக் கூட்டணி தான் வேண்டும் என்று மக்கள் தெளிவாக உள்ளனர்.
தேர்தலில் திமுக தோற்றால் கனிமொழி தனிக் கட்சி, ஸ்டாலின் ஒரு கட்சி. திமுக யாரிடம் செல்லும் என்று யாருக்கும் தெரியாது. கனிமொழியிடம் சேர்வதா, ஸ்டாலினிடம் செல்வதா என்று செந்தில் பாலாஜி யோசிப்பார். தே.ஜ. கூட்டணி வெற்றி பெறும்போது தமிழகத்தில் திமுக இனி ஜென்மத்துக்கும் ஆட்சிக்கு வராது. இவ்வாறு அவர் பேசினார்.