

பழநியில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன்
“தமிழகத்தில் வீட்டில் இருக்கும் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19) மாலை செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது: “அதிமுக ஆட்சி அமைந்தவுடன் விருதுகரில் பட்டாசு ஆலை விபத்துகள் முழுமையாக தடுக்கப்படும். இந்த தேர்தலில் மக்கள் விரோத கூட்டணிக்கும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் தான் போட்டி.
ஓரிரு தொகுதிகளில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவின் தோல்வி நாட்டில் உள்ள பெண்களுக்கான தோல்வி. தோல்வியடைந்ததாக நினைக்கும் எதிரணியினருக்கு தான் தோல்வி. இது பிரதமர் மோடிக்கு வெற்றி தான் . 2029 நாடாளுமன்ற தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஓதுக்கீடு கிடைக்கும் என்று நம்புகிறேன். பிரிந்து போனவர்களால் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு எந்த பாதிப்பும் இருக்காது.
தமிழகத்தில் பச்சிளம் குழந்தைகள் முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். பெண்கள் வெளியே சென்று வருவதற்கே அச்சம் உள்ளது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் போதைப் பொருள்கள் எளிதாக கிடைப்பதால் மாணவர்களும், இளைஞர்களும் போதைக்கு அடிமையாகி விடுவார்களோ என்ற அச்சத்தில் தாய்மார்கள், குடும்பத்தினர் இருக்கின்றனர். தமிழகத்தில் இருப்பது பொம்மை முதல்வர் என்று எல்லோரும் பேசிக் கொள்கின்றன”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.