

நல்லாம்பள்ளி அருகே ஏற்பட்ட விபத்தில் சுக்கு நூறாக நொறுங்கியது. காரில் பயணம் செய்து ஐந்து பேரும் உயிரிழந்தனர்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மற்றும் நண்பர் என மொத்தம் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம் மதுக்கரை எம்எல்ஏ வீதியை சேர்ந்தவர் கனகராஜ் (45) தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பூரணி என்கின்ற உமா மகேஸ்வரி (39) இவர்களது மகள்கள் ஆர்த்தி (25) பிசியோதெரபிஸ்ட் படிப்பு முடித்து விட்டு வேலைக்கு சென்று வந்துள்ளார். இளைய மகள் நர்மதா (20) நேரு கல்லூரியில் பிசியோதெரபிஸ்ட் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர்களது தூரத்து உறவினரான ராமன் (35) ஆகியோருடன் ஒரே காரில் கனகராஜ் குடும்பத்தினர் இன்று உடுமலை அருகே உள்ள ஒரு குல தெய்வம் கோயிலுக்கு சென்று விட்டு மதியம் வீடு திரும்பிக் கொண்டு இருந்தனர். காரை கனகராஜ் ஓட்டி வந்துள்ளார்.
பொள்ளாச்சி அருகே நல்லாம்பள்ளி அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் மீது கார் மோதியது. இதில் கார் சுக்கு நூறாக நொறுங்கியதில் சம்பவ இடத்திலேயே 5 பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கோமங்கலம் போலீஸார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்த ஐந்து பேரின் சடலங்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக கோமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “கனகராஜ் உள்ளிட்ட ஐந்து பேரும் உடுமலை அருகே உள்ள குல தெய்வம் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் முடித்துவிட்டு மீண்டும் ஊர் திரும்பி கொண்டு இருந்தனர். நல்லாம்பள்ளி அருகே சென்ற போது சாலையோரம் சாலை மையத் தடுப்பில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக நின்று கொண்டிருந்த லாரியின் மீது எதிர்பாராத விதமாக கார் மோதி விபத்துக்குள்ளானது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.” என்றனர்.