ஆனைமலை: சிதிலமடைந்த வீடுகளில் ஆபத்தான நிலையில் வசிக்கும் பழங்குடியினர்!

புதிய குடியிருப்புகள் கட்டித்தர கோரிக்கை
புளியங்கண்டி கிராமத்தில் சிதிலமடைந்து காணப்படும் பழங்குடியின மக்களின் தொகுப்பு வீடுகள்.

புளியங்கண்டி கிராமத்தில் சிதிலமடைந்து காணப்படும் பழங்குடியின மக்களின் தொகுப்பு வீடுகள்.

Updated on
1 min read

ஆனைமலை: ஆனைமலை ஒன்றியம் கோட்டூர் பேரூராட்சியில் உள்ள புளியங்கண்டி கிராமத்தில் உள்ள பழங்குடியின மக்களின் தொகுப்பு வீடுகள் சிதலமடைந்து உள்ளதால், புதிய குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை மற்றும் மானாம்பள்ளி ஆகிய வனச் சரகங்கள் உள்ளன. இவற்றில் வனப்பகுதியில் 17 பழங்குடியின கிராமங்களும், ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 48 கிராமங்களும் உள்ளன. சுமார் 2,500 வீடுகளில் 8,500-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர்.

இதில் ஆழியாறு, சின்னாறுபதி, புளியங்கண்டி, டாப்சிலிப், கோழிகமுத்தி, பழைய சர்க்கார்பதி, தம்பம்பதி, நாகரூத்து, சுள்ளிமேட்டுப்பதி உட்பட பல கிராமங்களில் 40 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டன. பல பழங்குடியின கிராமங்களில் தொகுப்பு வீடுகள் சிதிலமடைந்து உள்ளன.

தற்போது நாகரூத்து, தம்பம்பதி பகுதிகளில் அரசு சார்பில் புதிய வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. ஆனால் புளியங்கண்டி பகுதியில் உள்ள தொகுப்பு வீடுகளில் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்தும், பக்கவாட்டு சுவர்கள் விரிசலுடனும் காணப்படுகின்றன.

கான்கிரீட் மேற்கூரைகளில் மழைநீர் கசிவதால் அச்சமடைந்துள்ள பழங்குடியின மக்கள், தார்ப்பாலின் சீட்டை வைத்து வீட்டின் மேற்கூரையை மூடியுள்ளனர். சேதமடைந்த தொகுப்பு வீடுகளுக்கு பதிலாக தங்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறும்போது, ‘‘புளியங்கண்டி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் மூன்று தலைமுறையாக வசித்து வருகிறோம். எங்களுக்கு கடந்த 2001-ல் தமிழக வனத்துறை சார்பில் 41 தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டன.

தற்போது அந்த வீடுகள் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன. எந்நேரமும் வீடுகள் இடிந்து விழும் நிலையில் அச்சத்துடன் உள்ளோம்.

புதிய தொகுப்பு வீடுகள் கட்டித்தரக்கோரி பழங்குடியினர் நலத்துறை, வனத்துறை, வருவாய்த் துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

<div class="paragraphs"><p>புளியங்கண்டி கிராமத்தில் பழங்குடியின மக்களின் தொகுப்பு வீட்டின் மேற்கூரை சேதமடைந்துள்ளது.</p></div>

புளியங்கண்டி கிராமத்தில் பழங்குடியின மக்களின் தொகுப்பு வீட்டின் மேற்கூரை சேதமடைந்துள்ளது.

மழைக் காலத்தில் வீடுகள் இடிந்து அசம்பாவிதம் ஏற்படும் முன்பு புதிய வீடுகள் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

<div class="paragraphs"><p>புளியங்கண்டி கிராமத்தில் சிதிலமடைந்து காணப்படும் பழங்குடியின மக்களின் தொகுப்பு வீடுகள்.</p></div>
செழியன்: இரவு முழுக்க ஓயாத இசை! | அஞ்சலி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in